Home நாடு எம்எச் 17 – போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் புதிய...

எம்எச் 17 – போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் புதிய சர்ச்சை!

714
0
SHARE
Ad

MH17ii_19072014_840_559_100மாஸ்கோ, நவம்பர் 18 – உக்ரைன் இராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் தாக்கி தான் எம்எச் 17 விபத்துக்குள்ளானது என ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட மாஸ் விமானம் எம்எச் 17, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் ஏவுகணை வீசி வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மாஸ் விமானத்தை உக்ரைன் போர் விமானம் தான் தாக்கியது என்று ரஷ்யா தெரிவித்தது. ஆனால் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை கொண்டு ரஷ்ய ஆதரவு போராளிகளால் தான் தாக்கப்பட்டது என அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ‘ஒட்நாகோ’ (Odnako) என்ற செய்தி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் மாஸ் விமானத்தை உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் தாக்கியதாகக் கூறி அதற்கான புகைப்படங்களையும் காண்பித்தனர்.

இது பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிமிட்ரி போரிசோவ் கூறுகையில், “மாஸ் விமானம் உக்ரைனில் சுட்டுத்தள்ளப்பட்டபோது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்கள் எடுத்த புகைப்படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனையே நாங்கள் தற்போது வெளியிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்பட ஆதாரங்கள் பொய்யானவை என ரஷ்யாவின் முக்கிய ஊடகங்களே கருத்துக்களை தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் மாஸ் விமானம் தாக்கப்பட்டது குறித்து ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனத்திற்குள்ளானார். தொலைக்காட்சி நிறுவனம் மாநாடு துவங்குவதற்கு முன்பாக இந்த புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.