கோலாலம்பூர், ஏப்ரல் 1 – அன்வாருக்கு அரச மன்னிப்பு கேட்டு அவரது குடும்பத்தினர் மாமன்னரிடம் கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதி 42-ன் கீழ் தான் மனு செய்தனர். விதிமுறை 113-ன் கீழ் கிடையாது என கூறப்படுகின்றது.
இது குறித்து சட்டத்துறை இலாகாவின் சிவில் பிரிவிற்கு தலைமை வகிப்பவரும், மூத்த கூட்டரசு வழக்கறிஞருமான அமர்ஜித் சிங் கூறுகையில், “அகோங் முன்னிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அரச மன்னிப்பு விசாரணைக்குழு கூட்டம் நடைபெற்றது. நாங்கள் மனுவை சமர்ப்பித்தோம். அம்மனு அன்று நிராகரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கூட்டரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 48 (4)(c)-ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் தனது தகுதியை இழந்தவுடன் அந்த இடம் காலியாகும். ஆனால் விடுப்பு விண்ணப்பத்தை தொடர்வதில் எந்த ஒரு தடையும் இல்லை” என்றும் அமர்ஜித் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அரச மன்னிப்பு விசாரணைக் குழு அன்வாரின் மனுவை நிராகரித்துவிட்டதாகவும், எதிர்கட்சித் தலைவர் தனது நாடாளுமன்ற தொகுதியை இழப்பார் என்றும் அறிவிக்கப்பட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
எனினும், அரச மன்னிப்பு விசாரணைக் குழுவின் முடிவை இன்று நீதிமன்றம் உறுதிப்படுத்துவதாக அறிவித்துள்ளது என்றும் மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.