கோலாலம்பூர் – மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களும், அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஒரு நிறைவை நாடியுள்ள நிலையில்-
தேசியப் பொதுப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா பேராளர்களிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவாதம்-
நடப்பு உதவித் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மஇகா தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா அல்லது தனது நடப்புப் பதவியைத் தற்காக்க மீண்டும் உதவித் தலைவருகே போட்டியிடுவாரா என்பதுதான்!
தேசியத் துணைத் தலைவருக்குப் போட்டியிடுவேன் என நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவரும் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான டத்தோ எம்.சரவணன் அண்மையில் அறிவித்து விட்டார்.
அவரை எதிர்த்து தேவமணியும் போட்டியில் குதிப்பார் என்ற ஆரூடங்கள் மஇகாவில் பரவி வரும் நிலையில், இன்னும் மௌனம் காத்து வருகின்றார் தேவமணி.
அன்று ஓரணியில் பிரச்சாரம் – இன்றோ எதிரும் புதிருமா?
இரண்டே ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோன்ற ஒரு கேள்வி எதிர்காலத்தில் தங்களின் கட்சியில் எழும் என மஇகா பேராளர்கள் யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
காரணம், 2013ஆம் ஆண்டு நடந்த மஇகா தேர்தலில், சரவணனும், தேவமணியும் ஒரே அணியாக, உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டார்கள். ஒரே மேடையில் நின்று ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவர் உயர்வாகப் பேசினார்கள்.
அந்தத் தேர்தலில் சரவணன் வெற்றி பெற, தேவமணி தோல்வியைத் தழுவினார்.
பின்னர் அந்தத் தேர்தல் சங்கப் பதிவகத்தால் செல்லாது என அறிவிக்கப்பட, 2009 மத்திய செயலவையே இடைக்கால மத்திய செயலவையாக அதிகாரம் பெறும் என சங்கப் பதிவகம் முடிவு செய்த காரணத்தால்-
அந்த மத்திய செயலவையில் உதவித் தலைவர்களாக இருந்த சரவணனும், தேவமணியும், இயல்பாகவே மீண்டும் தங்களின் உதவித் தலைவர் பதவிகளில் அமர்ந்தனர்.
2013 கட்சித் தேர்தலில் அவர்கள் இருவரையும் எதிர்த்து, தேர்தல் களத்தில் எதிரணியில் நின்றவர்களில் முக்கியமானவர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங் ஆகியோர்.
ஆனால் இன்றைக்கோ, மஇகாவில் அரசியல் காட்சிகள் மாறிவிட்டன. தற்போது விக்னேஸ்வரன், சரவணனுடன் இணைந்து நெருக்கமாகக் காணப்படுகின்றார். ஜஸ்பால் சிங்கும் சரவணனுடன் நட்பு பாராட்டுகின்றார்.
ஆனால், அன்று ஒன்றாக ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்த சரவணனும், தேவமணியும் இன்றைக்கு எதிரணியில் – ஒருவரை எதிர்த்து இன்னொருவர் போட்டியிடுவார்கள் என்ற ஆரூடங்கள் புறப்பட்டுள்ளன.
தேவமணி சரவணனை எதிர்த்துப் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் சரவணன் அநேகமாக, ஏகமனதாக தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படியே வேறு யாராவது துணைத் தலைவருக்குப் போட்டியிட்டாலும், அது சரவணனுக்குக் கடுமையான போட்டியாக இருக்காது என்றும் சரவணன் எந்த ஒரு வேட்பாளரையும் சுலபத்தில் வென்று விடுவார் என்பதுமே மஇகாவின் இன்றைய நிலைமையாக இருக்கின்றது.
அதே வேளையில், சரவணனை எதிர்த்துப் போட்டியிடாமல், மீண்டும் உதவித் தலைவருக்கே போட்டியிட்டால், தேவமணிக்கு ஆதரவும், அனுதாப வாக்குகளும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சரவணனின் ஆதரவாளர்களும் தேவமணிக்குத் தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என்பதால், அதன் மூலம் அவர் முதலாவது உதவித் தலைவராக வெல்லக் கூடிய வாய்ப்பும் அதிகம் இருப்பதாக ஒருசில மஇகா அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
எனவேதான், தேவமணி எந்தப் பதவிக்குப் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு விடைகாண மஇகா பேராளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
போட்டி நடந்தால் வெற்றி யாருக்கு?
தேவமணிக்கும், சரவணனுக்கும் இடையில் அப்படியே போட்டி நடக்குமானால் அத்தகைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்றும் யார் வெற்றி பெற்றாலும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் எனப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
காரணம், பழனிவேல் தரப்பினரில் பெரும்பாலோர் கட்சிக்கு வெளியே நிற்கும் வேளையில், இன்றைக்கு மஇகாவில் இருக்கின்ற பேராளர்களில் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக்கொண்டவர்கள்.
நடைபெற்று முடிந்த பழனிவேல்-சுப்ரா இடையிலான கட்சித் தலைமைத்துவப் போராட்டத்தின்போது, சரவணன், தேவமணி இருவருமே டாக்டர் சுப்ராவை ஆதரித்தார்கள்.
இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி என்றால், சுப்ராவின் ஆதரவு வாக்குகள் யார் பக்கம் சேரும் என்பது குறித்து யாரும் தெளிவாக சொல்ல முடியாத நிலைமையில் கட்சி இருக்கின்றது.
அதோடு, இப்போது நிறைய பேராளர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதால், அவர்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்பது குறித்தும் யாராலும் இப்போதைக்குக் கணிக்க முடியாது.
பழனிவேலுவுக்கு எதிரான தலைமைத்துவப் போராட்டத்தில் சரவணன், தேவமணி இருவருமே தன்னை முழுமையாக ஆதரித்தவர்கள் என்பதால், அவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி என்றால், தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவும், யாரையும் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், கட்சியில் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும், பண அரசியல் கூடாது, என அறைகூவல் விடுத்து வரும் சுப்ரா துணைத் தலைவருக்கு மட்டும் ஒரு சார்பாக முடிவெடுக்க முடியாத நிலைமையில் இருக்கின்றார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்திவிட்டு, தானும் நடுநிலைமை வகித்துக்கொண்டு, தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் மட்டும் சரவணன்-தேவமணி இருவருக்கும் இடையில் சமரச முயற்சிகளை சுப்ரா மேற்கொள்ளக் கூடும் என்றும் சில மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மஇகா தேசியப் பொதுப் பேரவையின்போது நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தேவமணி துணைத் தலைவர் போட்டியில் குதிப்பாரா – அவருக்கும் சரவணனுக்கும் இடையில் சமரசம் ஏற்படுமா –
என்பதைக் காண மஇகா பேராளர்கள் ஆவலுடன் – ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்கள்.
-இரா.முத்தரசன்