Home Photo News பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு இஸ்மாயில் சாப்ரி – சரவணன் வருகை

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு இஸ்மாயில் சாப்ரி – சரவணன் வருகை

175
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தீபாவளிக்கு முதல் நாள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வருகை தந்தார்.

அவர்கள் இருவரும் லிட்டல் இந்தியா வளாகத்திலுள்ள சில கடைகளுக்கு வருகை தந்ததோடு, அந்த வட்டாரத்தையும் சுற்றிப் பார்த்தனர். அங்கு தீபாவளியை முன்னிட்டு இறுதி நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்த மக்களுடன் அளவளாவினர்.

லிட்டல் இந்தியா என்பது சரவணனின் மனதுக்கு மிக நெருக்கமான ஓர் அம்சமாகும். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்தபோது, லிட்டல் இந்தியா வளாகத்தை உருவாக்கும் பரிந்துரையைச் சமர்ப்பித்து அதற்கான முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

அதன் காரணமாகவே, லிட்டல் இந்தியா பகுதி பிரகடனப்படுத்தப்பட்டு இன்றைக்கு வணிக ரீதியாகவும் சுற்றுப் பயணிகளின் வருகை ரீதியாகவும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

லிட்டல் இந்தியா வளாகம் 27 அக்டோபர் 2010-ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் அப்போதைய மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொண்டார்.

லிட்டல் இந்தியா தொடங்கப்பட்ட அக்டோபர் 27-ஆம் தேதி தனது முகநூலில் கீழ்க்காணும்படி சரவணன் பதிவிட்டார்.

“லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகின்றன. நான் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த பொழுது இந்த லிட்டில் இந்தியா உருவாக்கப்பட்டது.

இந்தியர்களுக்கென ஒரு தளம்.. சாலையின் இரு மருங்கிலும் நமது வணிக மையங்கள். இந்தியர்களின் கலையம்சங்களுடன், பிரதான நுழைவாயில், ஒவ்வொரு பக்கமும் நமது கலைகள் நிறைந்திருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அதற்கான வேலைகளில் ஈடுபட்ட அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். இன்று 14 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஒரு மாமாங்கம் கடந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா இந்தியர்களின் வணிக மையமாக உருவெடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் உருவெடுத்துள்ளதைப் பார்க்க மனம் பூரிப்படைகிறது.”