Home Featured நாடு “60 முதல் 70 சதவீத பேராளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவேன்” – சிறப்பு நேர்காணலில்...

“60 முதல் 70 சதவீத பேராளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவேன்” – சிறப்பு நேர்காணலில் சரவணன் நம்பிக்கை (பாகம் 2)

965
0
SHARE
Ad

Saravanan 8கோலாலம்பூர் – (டத்தோ எம்.சரவணன் செல்லியலுக்கென வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பாகம் நேற்று  இடம் பெற்றது. அந்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இங்கே தொடர்கின்றது)

கேள்வி: துணைத் தலைவர் தேர்தலில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?

சரவணன் :

#TamilSchoolmychoice

நான் கடந்த இரண்டு வாரங்களாக மட்டும், இந்தத் தேர்தலுக்காக மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் மூலமாகவும், நேரடியாகவும், பல்வேறு வகைகளில் நான் பேராளர்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன்.

கடந்த ஓராண்டாக நடைபெற்ற கட்சிப் போராட்டங்களில் நான் முன்னின்று ஆற்றிய கட்சிப் பணிகளையும், அதன் தன்மைகளையும், பேராளர்களும் நன்கு அறிவார்கள்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததும், நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பேராளர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் காட்டும் அபரிதமான ஆதரவு எனது தலைமைத்துவத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.

தொகுதித் தலைவர்களும் எனக்காக கடுமையானப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள். கட்சியின் முக்கியத் தலைவர்களும் எனக்காக ஆதரவு காட்டுகின்றார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எப்படியும் நான் பேராளர்களின் 70 சதவீத ஆதரவைப் பெற முடியும் என உறுதியாக நம்புகின்றேன்.

அப்படியே சில உள்குத்து வேலைகள், மறைமுகத் துரோகங்கள் நடந்தாலும், எப்படியும் பேராளர்களின் 60 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கேள்வி: கட்சித் தலைமைக்கான போராட்டத்தில் நீங்கள் நடப்பு தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவை ஆதரித்தீர்கள். ஆனால் இப்போது, தேசியத் தலைவரோ துணைத் தலைவர் போட்டியில் நடுநிலை வகிக்கின்றார். இதனால், உங்கள் இருவருக்கும் இடையிலான உறவில் பாதிப்பேதும் ஏற்பட்டுள்ளதா?

Saravanan - MIC -சரவணன்:

எங்கள் இருவருக்கும் இடையிலான அரசியல் உறவு எப்போதும்போல் சுமுகமாகவே இருக்கின்றது. எனக்கும் தேவமணிக்கும் இடையிலான போட்டியால் தேசியத் தலைவருடனான எனது உறவில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

கட்சியில் பிரச்சனைகள் தலைதூக்கி, உச்சகட்டத்தில் இருந்தபோது நாங்கள் இருவரும் இணைந்து  ஒன்றாக வேலை செய்தோம். இன்னொரு தலைமைத்துவத்தை ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராடினோம், கட்சியின் நன்மைக்காக!

அதன் காரணமாக, எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டது. இப்போது கட்சி அமைதியான, போராட்டம் இல்லாத சூழலிலும் எங்களுக்கிடையில் அந்தப் புரிந்துணர்வு தொடரவே செய்கின்றது.

தேசியத் தலைவரின் நிலைப்பாட்டை நான் வரவேற்கின்றேன். ஒரு போட்டியின் மூலம், பேராளர்களுக்கு இரண்டு தேர்வுகளைக் கொடுத்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறையை நான் பெரிதும் மதிக்கின்றேன். அந்தவகையில் தேசியத் தலைவரின் முடிவை நான் மதிக்கின்றேன்.

கடந்த காலங்களில் தேசியத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இவர்தான் எனக்குப் பிறகான தலைவர் என்று அறிமுகப்படுத்தியது, அவருக்காகப் பிரச்சாரம் செய்தது எல்லாம் பின்னர் தவறானத் தேர்வாகப் போய்விட்டதை கடந்து போன கட்சி வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கின்றது.

எனவே, இனியொரு முறை அந்தத் தவறு நிகழக் கூடாது. பேராளர்கள் முடிவு செய்யட்டும் யார் சரியான துணைத் தலைவர் என்று! அதை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கின்றேன்.

எனவே, தேசியத் தலைவர் எடுத்திருக்கும் நடுநிலை வகிக்கும் முடிவு ஒரு விவேகமான முடிவாகத்தான் நான் பார்க்கின்றேன்.

ஒரு போட்டியின் வழி, பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் தேசியத் துணைத் தலைவராக வருவதையே நானும் விரும்புகின்றேன்.

தேசியத் தலைவர் நடுநிலை வகிப்பது எனக்குரிய பலமாகத்தான் பார்க்கின்றனே தவிர, பலவீனமாகப் பார்க்கவில்லை.

Saravanan 7கேள்வி: துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உங்களின் திட்டங்கள் என்ன?

சரவணன்: எனக்கென எந்தவிதமான கட்சித் திட்டங்களையும் நான் வைத்துக் கொள்ளப் போவதில்லை. தேசியத் தலைவரின் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் நான் துணை நிற்பேன்.

தேசியத் தலைவருடன் இணைந்து பணியாற்றி கட்சிக்கு மரியாதையை ஏற்படுத்தித் தருவேன்

இன்று ஏறத்தாழ 880,000 இலட்சம் இந்தியர்கள் 18 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் எனப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இவர்களை கட்சியின் அரசியல் நீரோட்டத்தோடு இணைத்தால்தான் கட்சிக்கு எதிர்காலம் உண்டு. அந்த இளைய தலைமுறையை கட்சிக்குள் கொண்டு வந்து சேர்ப்பதையே எனது முதல் கடமையாகக் கொண்டுள்ளேன்.

-இரா.முத்தரசன்

அடுத்து: (பாகம் 3)

  • துணைத் தலைவருக்கான போட்டியில் உங்களின் தனித்துவமாக எதைப் பார்க்கின்றீர்கள்?
  • ன்று கட்சிக்கு வெளியே நிற்கும் கணிசமான மஇகா கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் குறித்து உங்களின் முடிவு என்ன?