சென்னை – திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கையில்லா கூட்டணி என்று விமர்சித்த அழகிரியையும், அவரது பேச்சையும் அலட்சியப்படுத்துங்கள் என்று தனது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கழகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக, கட்சியினால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க. அழகிரி, அவ்வப்போது கழகத்தின் வளர்ச்சியைக் கெடுக்கும் வகையிலும், கழகத்தின் எழுச்சியைக் குலைப்பதற்காகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டும், பேட்டி கொடுத்தும் வருகிறார்.”
“அவருக்கும் திமு கழகத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இந்தத் தேர்தலில் கூட்டணி ஏற்பட்டது குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்றும், அதிமுகவை எந்தக் கூட்டணியும் வெல்ல முடியாது என்றும் பேட்டி அளித்திருப்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.”
“மேலும், அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திமுகவினர் யாரும் அவர் தெரிவித்து வரும் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை. அவரையும், அவருடைய பேச்சுக்களையும் அலட்சியப்படுத்துங்கள்” என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.