Home உலகம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை

இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை

1979
0
SHARE
Ad

இலண்டன் – இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த ‘ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடிஸ்’ (SOAS – School of Oriental and African Studies) தனி பல்கலைக் கழகமாக SOAS London University என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு வட்டாரங்களின் மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டுக் கூறுகள் மீதிலான கல்வி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலண்டன் SOAS பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை

இந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வி கற்பிக்கப்படும், மற்றும் தமிழ் மொழி மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வகையில் இங்கு தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“நம் தாய் தமிழின் சுவையை அறிந்திட்ட நாம், அதன் பெருஞ்சுவையை தமிழின சந்ததியரும், பிற மொழி ஆர்வலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக (மீண்டும்) தமிழ் கல்வி வசதிகள் உருவாக்கிடப் இலண்டன் பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான அனுமதிக் கடிதத்தை, 18 சூலை 2018 அன்று இலண்டன் தமிழ் ஆர்வலர்களுக்கு வழங்கினர்” என இதன் தொடர்பில் செயலாற்றி வரும் குழுவினர் அறிவித்துள்ளனர்.

1918-ஆம் ஆண்டில் SOAS என்ற பிரிவு துவக்கப்பட்டது. கல்லூரி துவங்கிய காலம் முதல், தமிழ் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் நிதி பற்றாக்குறையினாலும், மாணவர் சேர்க்கையின்மையினாலும் தமிழ் மொழித்துறை 1995 – 2000 கால கட்டத்தில் நின்றுபோனது.

தற்போது பிரிட்டனில் வசிக்கும் பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் SOAS-இல் தமிழ் படிப்பதற்கும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் புதிய கட்டமைப்புகள் தொடங்குவதற்கான சூழல் மலர்ந்துள்ளது. உலக அரங்கில் சிறந்து விழங்கும் தமிழ் ஆய்வாளர்களான பேராசிரியர் ஜோன் மார் (Prof. John Marr), ஸ்டுவார்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), மற்றும் டேவிட் ஷூல்மன் (David Shulman) ஆகியோர்களை உருவாக்கியப் பெருமை இலண்டன் பல்கலைக்கழகத்தையே சாரும்.

இங்கு உருவாக உள்ள தமிழ் கட்டமைப்புகள் ஓர் ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் தமிழ் இருக்கையாக மட்டும் இல்லாமல், பேராசிரியர்களையும் மற்றும் விரிவுரையாளர்களையும் கொண்டு தமிழில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மேற்கொள்ள இருப்பதால், உலக அரங்கில் தமிழ் ஒரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மொழியாக சிறந்து விளங்க வழிவகை செய்யும்.

தமிழில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்த, நான்கு மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு தமிழ் மொழியின் பெருமைகளை பல்வேறு நாட்டவரும் படித்து செல்ல ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

இலண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் மிகப் பழமையான தமிழ் நூல்களும், அரிய குறிப்பேடுகளும் மற்றும் ஓலைச் சுவடிகளும் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகள் மற்றும் அரிய நூல்களை மின்னாக்கம் செய்து, உலகெங்கும் பரவி வாழும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்வதும் SOAS-இன் நோக்கங்களில் ஒன்றாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவம் போன்றத் துறைகளில், தமிழர்களின் தொன்மையையும், சிறப்புகளையும் உலக அரங்கில் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி வசதிகள் அமைப்பதற்கான அங்கீகாரத்தை அறிவிப்பதற்காகவும், அதற்கான நிதியை திரட்டுவதை ஆரம்பித்து வைப்பதற்கான தொடக்க விழாவினை, பல்கலைக்கழக உறுப்பினர்களும், யுனைடெட் கிங்டம் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து அக்டோபர் 14-ஆம் தேதி SOAS வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு, அதன் பின்னர் அவ்வளாகத்தில் உள்ள புருணை விரிவுரை அரங்கத்தில் (Brunei Gallery Lecture Theatre -BGLT) நடத்தினார்கள்.

“உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் ஆசியும், உன்னதமான ஆதரவும் இணைந்து, இம்முயற்சி வெற்றிகரமாக நிறைவேறிட துணைநிற்க அனைவரையும்  பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் இதற்காகப் பாடுபட்டு வரும் குழுவினர் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலதிகத் தகவல்களுக்கு:

https://soas.hubbub.net/p/TamilStudies/