கோலாலம்பூர், நவம்பர் 29 – தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது குறித்து ம.இ.காவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இச்சட்டம் குறித்து தங்களுடன் எத்தகைய விவாதமும் நடந்ததாக தமக்கு நினைவில்லை என்றார் அவர்.
“ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் இச்சட்டம் குறித்த எங்களது கருத்துக்களை அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டு அது குறித்து விவாதிப்போம்,” என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.
உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் குறித்து வெளியான கருத்துக்கள் தொடர்பாக தமக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருக்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் முடிவு செய்திருப்பதாக டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என பிரதமர் நஜிப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.