கோலாலம்பூர், ஜூலை 2 – சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் மற்றும் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் திடீரெனத் திசை திரும்பிச் சமாதான உடன்படிக்கைக்கு வந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஜோகூர் இளவரசருக்கு, நஸ்ரி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
ஜோகூர் இளவரசர் குறித்து நஸ்ரி மலேசியாகினியிடம் கூறியுள்ளதாவது:-
“அவரைப் போல் தான் நானும், மனதில் தோன்றியதைச் சொன்னேன். அதில் ஏதாவது வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனையும் இல்லை”
“இது ஒரு புனித ரமடான் மாதம். இந்த மாதத்தில் அவர் (இளவரசர்) பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அதனால் அவருக்கு இனிமையான நோன்பாக இருக்கட்டும். அவர் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்.” என்று நஸ்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று துங்கு இஸ்மாயில், தனது பேஸ்புக் பக்கத்தில், நஸ்ரியுடன் தனக்கு மோதலை ஏற்படுத்த வேண்டாம் என ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சனையை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புனித ரமடான் மாதத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி தேசிய விவகாரங்கள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றுக்குப் பிரதமர் நஜிப் வராததை ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் விமர்சித்து இருந்தார்.
இதையடுத்து இளவரசர் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், இல்லையேல் மற்ற அரசியல் பிரமுகர்களைப் போல் அவரும் பதிலடிகளைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் நஸ்ரி கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, நஸ்ரி மற்றும் இளவரசர் இடையே வாக்குவாதங்கள் எழுந்தன.