Home நாடு எம்எச்17: பலியான 298 பயணிகளுக்கும் நினைவு அஞ்சலி!

எம்எச்17: பலியான 298 பயணிகளுக்கும் நினைவு அஞ்சலி!

554
0
SHARE
Ad

?????????????????????????சிப்பாங், ஜூலை 13 – எம்எச் 17 பேரிடரில் பலியான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமானோர் கனத்த இதயத்துடனும், கண்ணீருடனும் பங்கேற்றனர். நிகழ்வரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பயணிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது பயணிகளின் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தார், நண்பர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். இக்காட்சி காண்பவர் மனதைக் கரைப்பதாக இருந்தது.

எம்எச் 17 பேரிடரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்தச் சோக நிகழ்வு சனிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள பூங்காராயா வளாகத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில் பயணிகளின் உறவினர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மங்கலான நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தனர். இந்தப் பேரிடரில் பலியான பயணிகள் பத்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில், அரச மலேசியப் படையைச் சேர்ந்த வீரர்கள் அந்நாடுகளின் கொடிகளை ஏந்தியபடி மேடையில் நின்றிருந்தனர்.

இந்தப் பேரிடரில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்ஃபின்ஸ் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து நிகழ்வரங்களில் இருந்த பெரிய திரையில் பலியானோரின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பயணியின் பெயரும் திரையில் ஒளிர்ந்தபோது, அரங்கில் இருந்த உறவினர்கள் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் சிந்தினர்.

பயணிகளின் பெயர்ப் பட்டியல் வெளியான அந்த 10 நிமிடங்களும் அந்த அரங்கமே கண்ணீர்க் கடலில் மூழ்கியது போலிருந்தது. இதன் பிறகு ஆசுவாசமடைந்த பயணிகளின் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது நம்பிக்கையின்படி இறைவனைப் பிரார்த்தித்தபடியே சில நிமிடங்கள் மௌனம் காத்தனர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆர்டி மற்றும் டிவி 3 ஏற்பாட்டில் இந்நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தம்பதியர், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின், மத்திய அமைச்சர்கள், மதத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

காலை 10 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. பயணிகளின் உறவினர்கள் மட்டுமல்லாது, பிரதமர் நஜிப்பும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். அவர் நிகழ்வில் உரையாற்றியபோது அவரது குரல் ஒலித்த தொனியிலிருந்தே அவர் பெரும் துக்கத்தில் இருப்பதை உணர முடிந்தது.

இந்தப் பேரிடரில் பலியான பயணிகளில் பிரதமரின் பாட்டி சித்தி பிரவிரா குசுமாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.