கோலாலம்பூர், ஜூலை 18 – லோ யாட் மோதல் சம்பவம் தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அலி டிஞ்சு திட்டவட்டமாக மறுத்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் தேச நிந்தனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தாக அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
கடந்த 12ஆம் தேதியன்று லோ யாட் வணிக வளாகம் அருகே திடீர் கலவரம் மூண்டது. இச்சமயம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய முகமட் அலி என்கிற அலி டிஞ்சு, இனங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தன்னைத் தேடுவதாக பத்திரிகைகளில் வெளியான தகவலையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை தனது வழக்கறிஞர் கே.ரகுநாத்துடன் டாங் வாங்கி காவல் நிலையத்தில் சரணடைந்தார அலி டிஞ்சு.
பின்னர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். இந்நிலையில் அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலையான அவருக்குப் பிணை வழங்க வேண்டுமென வழக்கறிஞர் ரகுநாத் கோரிக்கை விடுத்தார்.
“காவல்துறையினர் விசாரணைக்கு அலி டிஞ்சு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். தனது வாக்குமூலத்தையும் அளித்துள்ளார். அவரை நம்பி 5 பிள்ளைகளும், மனைவியும் உள்ளனர். எனவே 5 ஆயிரம் வெள்ளி பிணையில் அவரை விடுவிக்க வேண்டும்,” என வழக்கறிஞர் ரகுநாத் கேட்டுக் கொண்டார்.
மேலும் முகமட் அலி சிறிய அளவில் வணிகம் செய்து வருவதாகவும், அவருக்கு நிரந்தர வருமானம் ஏதும் இல்லை என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அரசுத்தரப்பில் பிணைத்தொகையாக 10 ஆயிரம் வெள்ளி நிர்ணயிக்கப்பட வேண்டுமென வாதிடப்பட்டது.
இந்த வாதங்களின் முடிவில் அலி டிஞ்சுவை ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில், 8 ஆயிரம் வெள்ளி பிணைத் தொகையில் விடுவிப்பதாக நீதிபதி ஜக்ஜித் சிங் அறிவித்தார்.
1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ், அலி டிஞ்சு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.