Home இந்தியா “யாகூப் மேமன் அப்பாவி, அவரது அண்ணனைத் தூக்கிலிடுங்கள்” – நடிகர் சல்மான் கான்

“யாகூப் மேமன் அப்பாவி, அவரது அண்ணனைத் தூக்கிலிடுங்கள்” – நடிகர் சல்மான் கான்

600
0
SHARE
Ad

yaமும்பை, ஜூலை 26 – “மும்பை குண்டு வெடிப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமன் அப்பாவி. அவரை தூக்கிலிடக் கூடாது” என்று இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சல்மான் கான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை பிடித்து தூக்கில் போடுங்கள். அவருடைய சகோதரர் யாகூப் மேமன் அப்பாவி. அவரை தூக்கில் போடாதீர்கள். அப்பாவி ஒருவரைக் கொல்வது, மனித நேயத்தைக் கொல்வதற்குச் சமமானது. இந்த பதிவை வெளியிட 3 நாட்களாக முயன்று வருகிறேன். அதற்கு பயம் தான் காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சல்மான்கானின் டுவிட்டர் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது தந்தை சலீம் கான், யாகூப் மேமன் தொடர்பாக சல்மான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ம் தேதி 13 இடங்களில் இடைவிடாமல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரருமான யாகூப் மேமன் உள்பட 189 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு சதி செய்தல், பண உதவி மற்றும் பல்வேறு வழிகளில் உதவியதாக யாகூப் மேமன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து பல்வேறு மேல் முறையீடுகளும் நடந்தன. அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில் நிவாரண மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையும் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, கடந்த 21-ம் தேதி  தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, யாகூப் மேமனின் மரண தண்டனை, வரும் 30–ம் தேதி அதிகாலையில் நிறைவேற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.