மும்பை- ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா.) லட்சியத் திட்டங்களுக்கான தூதர்களாக இந்திய சினிமா பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. சபை அண்மையில் 17 இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை எட்டிப்பிடிக்கவும், இது தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஐ.நா. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல், அனைவருக்கும் சமவாய்ப்பு ஆகியன ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளில் சிலவாகும்.
இந்நிலையில் தனது இலக்குகள் குறித்து உலக மக்களிடம் பிரச்சாரம் செய்ய, உலகளவில் பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளவர்களின் உதவியை ஐ.நா. நாடியுள்ளது. அந்த வகையில் இந்தியத் திரையுலகின் முன்னணிக் கலைஞர்களான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் அக்சய்குமார், மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரையும், இந்த இலட்சியத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரச்சார தூதர்களாக ஐ.நா. நியமித்துள்ளது.
இவர்களைத் தவிர அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் ஐ.நா. தூதர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.