கோலாலம்பூர் – குவாந்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தூசி ஏற்படுத்தி, நீர் நிலைகள் சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், பகாங் இளவரசி துவாங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டரும் அப்போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
“போராடுங்கள் மக்களே, போராடுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக மக்களை அறிவுறுத்தி வருகின்றார்.
“இதைப் பேசும் இந்த நேரத்தில் கூட என் வாயில் தூசி படிந்து கொண்டு தான் இருக்கின்றது. என்னுடைய வீடும் பந்தாய் பாலோக்கில் தான் உள்ளது. எங்கள் வீட்டின் முன் உள்ள கடற்கரை முழுவதும் தற்போது சிவப்பாக மாறியுள்ளது” என்று துவாங்கு அசிசா தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் நடைபெறும் சுரங்கப் பணிகளால் பந்தாய் பாலோக் முழுவதும் சிவப்பு நிறத்திலான தூசி பரவுவதோடு, நீர் நிலைகளும் சிவப்பாக மாறி வருகின்றன. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
இது அரசாங்கத்தின் தவறு மட்டுமல்ல என்று குறிப்பிடும் துவாங்கு அசிசா, சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுபவர்கள் மற்றும் தங்கள் நிலங்களில் சுரங்கப் பணிகள் நடைபெற அனுமதி வழங்கும் நில உரிமையாளர்கள் ஆகியோரின் தவறுகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.