Home நாடு பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் – ஹிண்ட்ராப் பங்கேற்கும் கருத்தரங்கு!

பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் – ஹிண்ட்ராப் பங்கேற்கும் கருத்தரங்கு!

1031
0
SHARE
Ad

waytha,கோலாலம்பூர் – அமனா கட்சியின் புகழ்பெற்ற பேச்சாளர் துவான் ஹஜி முகமட் சாபு, முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஹிண்ட்ராஃப் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளும், “தேசிய முன்னணியை வீழ்த்த விவேக பங்காளித்துவம்” என்ற கருத்தரங்கம் இன்று செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 12, இரவு 7.30 மணி அளவில் கோலாலம்பூர் சீன சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஹிண்ட்ராஃப் செயலாளர் பொன்.முனியாண்டி வெளியிட்டிருக்கும் பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அறுபது ஆண்டுகளாக ஒரே அணியே நாட்டை ஆள்வது, மலேசியாவின் ஜனநாயக மரபுக்கு இழுக்கு என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்துள்ளனர்.”

#TamilSchoolmychoice

“இந்த நிலை கற்றுத் தெளிந்த மேல் மட்டத்தினர், அரசியல்-சமுகத் தலைவர்களிடம் மட்டுமல்ல; உழைக்கும் பாட்டாளி மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலாய் வாக்காளர்களிடம் இந்த நிலை, பதினான்காவது பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓர் எழுச்சியாகவேக் காணப்படுகிறது.”

“இப்படிப்பட்ட சூழலில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்த நம்பிக்கைக் கூட்டணியில் விவேகப் பங்காளித்துவம் அவசியம். இதன் தொடர்பில் தலைநகரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது” என ஹிண்ட்ராஃப் செயலாளர் பொன்.முனியாண்டி தெரிவித்துள்ளார்.

மேலும், “வரும் பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், மலாய் வாக்கு வங்கி மூன்றாகப் பிரியப்போகிறது. நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி, பாஸ் என மலாய் வாக்காளர்கள் அணி பிரியும் வேளையில், இந்திய வாக்காளர்கள் தான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழப் போகின்றனர்.”

“மலேசிய இந்திய சமுதாய உழைக்கும் வர்க்கத்தில் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு பேராதரவு நிலவுகிறது. அவர்களின் உரிமைக் குரலுக்கும் சமூக-பொருளாதார மீட்சிக்கும் அன்றாடம் குரலெழுப்புவது ஹிண்ட்ராஃப் கட்சி தான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.”

“மொத்தத்தில் இந்திய அடித்தட்டு மக்களிடம் ஹிண்ட்ராஃப் கட்சிக்கு உள்ள செல்வாக்கை நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான், இந்தக் கூட்டணியில் ஐந்தாவது பங்காளியாக ஹிண்ட்ராஃப் கட்சியை இணைத்துக் கொள்ள அவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.” என்றும் ஹிண்ட்ராஃப் செயலாளர் பொன்.முனியாண்டி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைவதற்குத் தன்னுடன் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தாலும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்கு இன்னும் ஹிண்ட்ராப் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை என பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் மகாதீர் தெரிவித்திருந்தார்.

எனவே, இன்றைய கருத்தரங்கில், ஹிண்ட்ராப், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் இணைவதற்காக அதிகாரப்பூர்வ நாள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.