கோலாலம்பூர் – கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில், 239 பேருடன் நடுவானில் மாயமான எம்எச்370 விமானம், தென்சீனக்கடலில் விழுந்து நொறுங்கி, அங்கு தான் கடலுக்கு அடியில் கிடப்பதாக முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் உறுதியாகக் கூறுகின்றார்.
ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படைத் தளபதியும், லுமூட் தொகுதி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் இம்ரான் அப்துல் ஹமீட் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசுகையில், “என்னுடைய அனுபவத்தில் ஒரு விமானம் ரேடாரில் இருந்து விலகிவிட்டது என்றால், ஒன்று அது நடுவானில் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும் அல்லது கடலில் விழுந்து நொறுங்கியிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்கள் தான் இருக்க வேண்டும்”
“விமானம் இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றதற்கு ஆதாரம் இல்லை. எனவே அது தென்சீனக்கடலில் தான் விழுந்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்வேன். எனவே அங்கு தேடுதல் பணியைத் தொடர வேண்டும்” என்று நேற்று நாடாளுமன்றத்தில் துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அஜிஸ் கப்ராவியிடம் முகமட் இம்ரான் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.