கோலாலம்பூர் -மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துமானால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மகாதீரிடம், ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய மத சார்பு பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மகாதீர், “அவருடைய செயல்பாடுகளை மலேசிய மக்கள் கவனித்து வருவார்கள் என நம்புகிறேன். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் அவரின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. மத, இன பதற்றத்தை யார் ஏற்படுத்தினாலும், அவர்கள் இந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் மகாதீர் கூறுகையில், “அவர் இங்கே மிகப் பெரும் அளவில் மதமாற்றங்களைச் செய்கிறார். அது இங்குள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு கவலைக்குள்ளாக்குகிறது.” என்றும் தெரிவித்திருக்கிறார்.