கோலாலம்பூர் – ஓர் அரசியல்வாதியிடம் தேர்தலில் வென்றால் நீங்கள்தான் அடுத்த பிரதமர் என்று கூறிப் பாருங்கள் – உடனே உற்சாகத்தால் அவரது குடும்பத்தினர் துள்ளிக் குதிப்பார்கள்!
ஆனால், எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் துன் மகாதீரின் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது.
மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் “எனது கணவரைப் பக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்ததும் நான் உண்மையில் கவலைப்பட்டேன். காரணம் அவர் முன்புபோல இல்லை. அவருக்கு 92 வயதாகி விட்டது” என மகாதீரின் மனைவி சித்தி ஹஸ்மா கூறியிருக்கிறார்.
சித்தி ஹஸ்மா அழுது கொண்டிருப்பது போலவும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு அன்வார் இப்ராகிமின் மனைவி வான் அசிசா, அவரைத் தேற்றுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் மலேசியாகினி தனது செய்தியில் வெளியிட்டிருக்கிறது.
“என்னால் கூட அவருடன் ஈடுகொடுத்து வெளியில் அதிகமாக நடமாட முடியவில்லை. சோர்ந்து விடுகிறேன்” என்றும் சித்தி ஹஸ்மா கவலையோடு கூறியிருக்கிறார்.
மகாதீர் 1981-ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற போது அவருக்கு வயது 56-தான். இப்போது 92-வது வயதில் மீண்டும் பிரதமராக முன்மொழியப்பட்டிருக்கிறார்.
சித்தி ஹஸ்மாவின் பேட்டியைத் தனது டுவிட்டர் தளத்தில் மறுபதிவிட்டிருக்கும் மகாதீர், அதில் “பொறுமையாக இருக்கவும் ஹஸ்மா. போராட்டம் இன்னும் ஓயவில்லை. மலேசியாவை மீண்டும் மீட்டெடுக்கும் போராட்டம்…” என்று பொருள்படும்படி, மலாய் மொழியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.