Home நாடு 17 மில்லியன் செலவில் தனியார் நிறுவனம் நிர்மாணித்த நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி

17 மில்லியன் செலவில் தனியார் நிறுவனம் நிர்மாணித்த நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி

1031
0
SHARE
Ad

ரெம்பாவ் – நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க செலவில் உருமாற்றம் கண்டு வரும் இந்த காலகட்டத்தில், ஒரு தமிழ்ப் பள்ளி தனியார் நிறுவனம் ஒன்றால் முழுவதுமாக சுமார் 17 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி என பிரதமர் நஜிப் துன் ரசாக் வாயாலேயே பாராட்டு பெறும் அளவுக்கு தோற்றம் கண்டுள்ளது.

ரெம்பாவ் நகரின் அருகில் உருவாகியுள்ள புக்கிட் பெர்தாம் தோட்டத் தமிழ்ப் பள்ளிதான் அது!

நேற்று திங்கட்கிழமை (26 பிப்ரவரி 2018) பிரதமர் நஜிப்பின் கரங்களால் திறப்பு விழா கண்ட அந்தப் பள்ளிக்கு தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளி பண்டார் ஸ்ரீ செண்டாயான் என புதிய பெயரும் சூட்டினார் பிரதமர்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளியின் அழகான, சிறந்த வடிவமைப்பையும், மிக உன்னதமான அதிநவீன கற்பிக்கும், கற்றல் வசதிகளையும் கொண்டிருக்கும் சூழலையும் பார்த்து நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளி இதுதான் என்ற புகழாரத்தையும் சூட்டியிருக்கிறார் பிரதமர்.

இவை மட்டுமல்ல! சுமார் 17 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செண்டயான் தமிழ்ப் பள்ளி முழுமையாக மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் பெர்ஹாட் (Matrix Concepts) என்ற தனியார் நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டது என்பதும் இந்தத் தமிழ்ப் பள்ளிக்கான மற்றொரு சிறப்பாகும்.

இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு நில மேம்பாட்டாளர் மெட்ரிக்ஸ் நிறுவனத்தை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்ததில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் மேற்கொண்ட முயற்சிகளையும் நஜிப் பாராட்டினார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான்

“மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் இரண்டு முக்கியத் தேவைகளை மந்திரி பெசார் முகமட் ஹசான் நன்கு உணர்ந்துள்ளார். தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் என இரண்டு அம்சத் தேவைகள்தான் அவை. மற்றவை எல்லாம் இந்திய சமூகத்திற்குக் கிடைக்கக் கூடிய கூடுதல் சலுகைகளாகும்” என்றும் நஜிப் நேற்று நடந்த ஸ்ரீ செண்டயான் பள்ளித் திறப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர்கள் டத்தோ ப.கமலநாதன் மற்றும் சோங் சின் வூன், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், ஆகியோரும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாணிக்கம் லெட்சுமணன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதி நவீன அம்சங்கள் – வசதிகள்

மிக நவீனமயமான நூலகம், அந்த நூலகத்தின் இடையே ஒரு பூங்கா, அரங்க மண்டபம், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் தனியறை, பாலர் பள்ளி வகுப்புகள், கணினி அறை, வெவ்வேறு வண்ணங்களில் கல்வி கற்கும் சூழலுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள் என இந்த நூற்றாண்டின் கல்வித் தேவைகளைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தேசிய மாதிரி ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளி மலேசியாவின் தமிழ்ப் பள்ளிகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றது.

1951-ஆம் ஆண்டில் லிங்கி நகரில் உருவானது இந்தப் பள்ளி. மரத்தாலான 10 மீட்டர் 7 மீட்டர் அளவில் ஒரே ஒரு வகுப்பறையோடு செயல்பட்ட இந்தப் பள்ளியில் அப்போது 47 மாணவர்கள் இருக்க ஒரே ஓர் ஆசிரியர்தான் இந்தப் பள்ளியில் பணியாற்றினார்.

பின்னர் 2017-இல் பண்டார் ஸ்ரீ செண்டயான் நகருக்கு இடம் மாறியது இந்தப் பள்ளி. 2.4 ஹெக்டர் நிலப் பரப்பில் 12 வகுப்பறைகளோடு, 162 மாணவர்களோடும், 14 ஆசிரியர்களோடும் உருவாகியுள்ளது புதிய ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளி.

தனக்கு வழங்கிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நஜிப் தனது தலைமையின் கீழ் தேசிய முன்னணி எந்த ஓர் இனத்தையும் புறக்கணிக்காது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து சேவைகளை வழங்கும் என்றும் உறுதி கூறினார்.இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நஜிப்பின் தலைமைத்துவத்தின் கீழ் 2012-ஆம் ஆண்டு முதல் 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடுகளை தமிழ்ப் பள்ளிகள் மட்டும் பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டார். 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவரின் தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதில்லை என்பதையும் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டினார்.

“நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் சுமார் 45 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த செலவழிக்கப்பட்டுள்ளது. இது இந்திய சமூகத்தின் மீதான எங்களின் கடப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. எங்களின் இந்தப் பணிகள் தொடரும் என்பதையும் இந்த வேளையில் உறுதி கூறுகிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா வலியுறுத்தினார்.

கற்பிக்கும் மற்றும் கற்றல் அம்சங்களில் தமிழ்ப் பள்ளிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட டாக்டர் சுப்ரா, ஸ்ரீ செண்டயான் தமிழ்ப் பள்ளி நாட்டிலேயே சிறந்த, மிக அழகான தமிழ்ப் பள்ளி என்றும் வர்ணித்தார்.

படங்கள்: நன்றி – drsubra.com