Home நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலா? அது இரகசியம் என்கிறார் நஸ்ரி

அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலா? அது இரகசியம் என்கிறார் நஸ்ரி

1205
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை (28 பிப்ரவரி 2018) அமைச்சரவைக் கூட்டத்தில் ரோபர்ட் குவோக் விவகாரத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது என சுற்றுலாத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அசிஸ் கூறியிருக்கிறார்.

“அமைச்சரவைக் கூட்டங்களின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் இரகசியமானவை. அதுகுறித்து பிரதமரோ அல்லது அதிகாரபூர்வப் பேச்சாளரோதான் பேச முடியும். சைனா பிரஸ் போன்ற சீனப் பத்திரிக்கைகள் அது குறித்து ஆரூடம் கூறியிருப்பதால் அவர்களிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். அல்லது அந்தச் செய்தியை வழங்கிய தரப்பு மசீச என்றால் அவர்களிடமே கேளுங்கள்” என்றும் நஸ்ரி தெரிவித்ததாக பிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளம் குறிப்பிட்டிருக்கிறது.

ரோபர்ட் குவோக் குறித்து நஸ்ரி தெரிவித்த கருத்துகளால் அமைச்சரவைக் கூட்டத்தில் அம்னோவுக்கும் சீனக் கட்சிகளுக்கும் இடையில் அனல் பறக்கும் விவாதங்களும், மோதல்களும் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சரவாக் எஸ்பிடிபி கட்சியின் தேசியத் தலைவரும் பிந்துலு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான தியோங் கிங் சிங் நஸ்ரியின் கருத்துகளுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்திருப்பது, தேசிய முன்னணியின் ஒற்றுமைத் தோற்றத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாக்காளர்கள் மத்தியிலான ஆதரவில் தேசிய முன்னணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

குறிப்பாக ஏற்கனவே சீன வாக்காளர்களிடையே தேசிய முன்னணிக்கு ஆதரவு  மங்கியிருக்கும் நிலையில், ரோபர்ட் குவோக் விவகாரத்தால் மேலும் ஆதரவு இழப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.