கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா கேட்டிருந்த ஆவணங்களையும், தகவல்களையும் சமர்ப்பிக்கத் தவறியதால் பெர்சாத்து கட்சி 30 நாட்களுக்கு தற்காலிக இரத்து செய்யப்படுவதாக ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது.
30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து தேவையான ஆவணங்களையும், தகவல்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றால், கட்சியின் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என்றும் ஆர்ஓஎஸ் குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்ஓஎஸ் பொது இயக்குநர் சுராயாத்தி இப்ராகிம், “சங்கப்பதிவகச் சட்டம் 1966, பிரிவு 14 (2)-ன் படி, தேவையான தகவல்களையும், அனைத்து ஆவணங்களையும் பெர்சாத்து சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான அறிக்கை கடந்த பிப்ரவரி 28-ம் தேதியே பெர்சாத்து கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒருவேளை, இந்த 30 நாட்கள் இடைக்கால பதிவு இரத்து காலத்திற்குப் பிறகு, ஏதாவது மேல்முறையீடு வந்தால், அது நிராகரிக்கப்படுவதோடு, பெர்சாத்துவின் பதிவு இரத்து நிரந்தரமாக்கப்படும்” என்றும் சுராயாத்தி இப்ராகிம் கூறினார்.