Home நாடு அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?

அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?

1877
0
SHARE
Ad
அமார் சிங்

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் நாட்டில் பல கதாநாயகர்களை – வேறு வேறு காரணங்களுக்காக – உருவாக்கியிருக்கிறது.

துன் மகாதீர் ஒருவகையில் ஒரு கதாநாயகன் என்றால், சிறையிலிருந்து வெளியே வந்த அன்வார் இப்ராகிம் இன்னொரு கதாநாயகன்.

ஆனால், எதிர்பாராத விதமாக காவல் துறையிலிருந்தும் ஒரு கதாநாயகன் திடீரென உருவாகி ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவர்தான் அமார் சிங் இஷார் சிங்!

காவல் துறைத் தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநரான அமார் சிங், 1எம்டிபி விவகாரங்களை விசாரிக்கும் பொருட்டு அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி பெட்டி, பெட்டியாக ரொக்கப் பணத்தையும், ஆடம்பரப் பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.

இப்போது காவல் துறையில் இருக்கும் அதிகாரிகளில் மிக உயர்ந்த அந்தஸ்துடைய பதவியில் இருப்பவர் அமார் சிங்தான் என்கிறார்கள். இந்தியர்களுக்கு காவல் துறையில் அதிக அளவில் பதவி உயர்வுகள் இல்லை என எழுந்த புகார்களுக்கு மத்தியில் அப்போதைய பிரதமர் நஜிப் தலைமையிலான அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்ட அமார் சிங் இன்று நஜிப்புக்கு எதிராகவே கடமையின் காரணமாக விசாரணையில் ஈடுபட்டிருப்பது, விதியின் விளையாட்டு என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் அமார் சிங் எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக, அவரது பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன. காரணம் 1 எம்டிபி குறித்து அவருக்கு தெரிந்திருக்கும் தகவல்கள், அனுபவங்கள்!

ஆனால், இன்று புதன்கிழமை (மே 23) வரையில் பதவி நீட்டிப்பு குறித்து எந்த தகவலும் பெறவில்லை என்கிறார் அமார் சிங்.

ஜூன் 6-ஆம் தேதிக்குப் பின்னரும் அமார் சிங் பதவியில் இருந்து விசாரணைகளைத் தொடர்வாரா?

பொதுமக்களும், காவல் துறையினரும் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர்!