Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

1678
0
SHARE
Ad
ஆப்பிள் விருது பெற்ற இராஜா விஜயராமனுடன் முத்து நெடுமாறன்

சான் ஓசே – ஜூன் 4 தொடங்கி அமெரிக்காவின் சான் ஓசே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர்களின்மாநாட்டில் வழங்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின்“புத்தாக வடிவமைப்பு விருது” – இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் இந்த  விருது அவர் ஆப்பிள் ஐபோன்களுக்காக உருவாக்கிய “கல்சி 3 (Calzy 3)”  என்றழைக்கப்படும் கணக்குப்  பொறி (கல்க்குலேட்டர்) குறுஞ்செயலிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த குறுஞ்செயலி பல்வேறு திறமைகளைக் கொண்டக் கணக்குப் பொறிச் செயலியாகும்.

#TamilSchoolmychoice

இது குறித்து செல்லியல் வாசகர்களுக்காகவும், தொழில் நுட்பஆர்வலர்களுக்காகவும் இராஜா விஜயராமன்  தனது கருத்துகளை, அமெரிக்காவில் இதே மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் முத்து நெடுமாறன் வழி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:

“1970-ஆம் ஆண்டுகளில் கணக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது முதல்  இதுவரையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும்  செய்யப்பட்டதில்லை. ஐபோன்களில் தற்போது  கிடைக்கக்  கூடிய  அதிநவீன தொழில்நுட்ப வசதிகளின்  துணையோடு  கணக்குப் பொறிசெயலியில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை செய்ய நான் முனைந்தேன்” என்று கூறிய ராஜா,‘முழுமையான பயனுருவாக்கம்’, கலைநயம் கொண்ட வடிவமைப்பு,  பயன்பாட்டு எளிமை,  ஈர்க்கும்  தன்மையைக் கொண்ட பயனர் இடைமுகம் முதலியக் கூறுகளின் அடிப்படையில் இந்த விருது எனது உருவாக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது”  என்று விளக்கினார்.

தமிழ் நாட்டின் தேனி மாவட்ட தமிழர்

இராஜா விஜயராமன் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இயந்திரப் பொறியியல் (mechanical engineering) துறை பட்டதாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக குறுஞ்செயலிகள் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக இவர் ஆப்பிள் அனைத்துலக மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடுகளை இணையம் வழியும், காணொளி வழியாக மட்டுமே பார்த்து வந்திருக்கிறார்.

இந்த ஆண்டுதான் இந்த மாநாட்டில் அவர் முதன் முறையாகக் கலந்து கொள்ளும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

உலகம் முழுவதுமிலிருந்து வந்திருக்கும் தன்னைப் போன்ற மேம்பாட்டாளர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதும் தனக்குக் கிடைத்த மறக்க முடியாத வாய்ப்பு என்றும் இதன் வழி தனது சிந்தனையும் அறிவாற்றலும் மேலும் விரிவடைந்துள்ளது என்றும் பெருமையுடன் கூறுகிறார் இராஜா விஜயராமன்.

படம் – தகவல் : அமெரிக்காவிலிருந்து முத்து நெடுமாறன்