(கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில், ஜூன் 4ஆம் நாள் தொடங்கி, ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில், தொடர்ந்து 16-வது ஆண்டாகக் கலந்து கொண்டிருக்கும் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், அங்கிருந்து செல்லியல் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்ட சில விவரங்களை இங்கே பதிவிடுகிறோம்.)
“அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜூன் மாத முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துல மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் மேம்பாட்டாளர்கள், மின்னுட்ப வடிவமைப்பாளர்கள், ஆர்வலர்கள் – என கணினி உலகின் அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மாநாடு இது.
கூகுளின் ‘ஐ.ஓ.’, மைக்குரோசாப்டின் ‘பில்ட்’ போன்றே, ‘டபிள்யு டபிள்யு டி சி’ (WWDC) எனப்படும் ஆப்பிள் மாநாடும் பல புத்தாக்க அறிவிப்புகளை உலகுக்குக் கொண்டுவரும் ஓரு மிகப் பெரிய தொழில் நுட்ப நிகழ்ச்சியாகும்.
பல பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை மேலும் விரிவடையச் செய்வதற்காக, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு புனிதப் பயணம் போன்றது இந்த மாநாடு!
எனக்கும் அதுபோலத்தான்! அதனால்தான் கடந்த 16 ஆண்டுகளாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வருகிறேன்.
தமிழ்க் கணினி உலகிற்கு இயன்ற அளவுக்கு எனது சிறிய பங்களிப்பினை வழங்குவதற்காக, எனது மின்னுட்ப அறிவை மேம்படுத்தியதில், ஆப்பிள் நிறுவனத்திற்கும், இந்த மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாட்டுக்கும் பெரும் பங்குண்டு.
முன்பெல்லாம் இந்த மாநாடுகளில் இந்தியாவிலிருந்து இந்தியர்கள் கலந்து கொள்வது மிகவும் அரிதாக இருந்தது. இந்தியாவிலிருந்து வந்த இந்தியரைப் போன்றத் தோற்றமளிக்கும் ஒருவரைப் பார்ப்பதும் அரிதாக இருந்தது.
அதற்குக் காரணங்களும் இருந்தன. மாநாட்டுக்கான பதிவுக் கட்டணம் மிகவும் அதிகம் என்பதோடு, அமெரிக்காவுக்கு வந்து செல்லும் செலவினங்கள் என சொந்தமாக கைப்பணத்தை நிறைய செலவு செய்துதான் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும்.
அதே வேளையில் ஆப்பிள் கருவிகள் அப்போதெல்லாம் இந்தியாவில் பரவலானப் பயன்பாட்டில் இல்லை. அதிக அளவில் விற்பனையாவதும் இல்லை.
எனவே, அவ்வளவு பணம் செலவழித்து ஆப்பிள் மாநாட்டுக்கு வருவதற்கு ஒரு தொழில்நுட்ப ஆர்வலருக்கு ஊக்கக் காரணங்கள் எதுவும் இருந்ததில்லை.
ஆனால், ஐபோன்களின் வரவும், இந்தியச் சந்தையை, ஆப்பிள் முதன்மையாக்கியதும் இந்தச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் ஆப்பிள் மாநாடுகளில் இந்திய பங்கேற்பாளர்களை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இவர்களில் பலர் அமெரிக்காவிலேயே தொழில் காரணங்களுக்காகத் தங்கியிருப்பவர்கள் என்றாலும், கணிசமான மின்னுட்ப மேம்பாட்டாளர்கள் இந்தியாவிலிருந்தும் இந்த மாநாட்டுக்கென தனிப்பட்ட அக்கறை எடுத்து நேரில் வந்து கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டு மாநாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் கலந்து கொண்டனர். அவர்களில் பலர், அவரவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப் பட்டவர்கள். இந்தப் பங்கேற்பாளர்கள், ஒருவரோடு ஒருவர் தமிழிலேயே கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளும் களிப்பூட்டும் காட்சிகள் இந்த ஆண்டு மாநாட்டில் ஆங்காங்கே அரங்கேறின. அகம் மலரச் செய்தன!
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், இந்தியாவில் ஐபோன்களின் பயன்பாடு விரிவான அளவில் அதிகரித்து வருவதும், இந்தக் கருவிகளில் சேர்க்கப்படும் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பல புத்தாக்கங்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்னும் ஆர்வம் கூடிவருவதும் தான் எனலாம்.
போட்டி என்று வந்தவுடன், முந்தி இருக்கும் பொருள்களை உருவாக்குவதே வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும். முந்திச் செல்வதற்குத் திறன்களை உடனுக்குடன் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் மின்னுட்ப மேம்பாட்டாளர்களும், அவர்கள் பிரதிநிதிக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கானக் காரணங்களாக அமைந்தன.
ஐஓஎஸ் இயங்கு தளத்திற்கென குறுஞ்செயலிகளை அதிக அளவில் உருவாக்கிப் பதிப்பிப்பதற்கான ஊக்கமும் புத்தெழுச்சியும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்ற தமிழர், மிகவும் பெருமைக்குரிய ஆப்பிள் “நிறுவனத்தின் புத்தாக்க வடிவமைப்பு விருது” (Apple Design Award) என்னும் புகழ்மிக்க விருதினைப் பெற்றிருக்கிறார் என்பதும் நமக்கெல்லாம் பெருமையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தியாகும்.
அவர் ஐபோன்களுக்காக வடிவமைத்த கணக்குப் பொறிச் செயலி (கல்க்குலேட்டர்) சிறந்த வடிவமைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டது.
-முத்து நெடுமாறன்
அடுத்து :