புத்ரா ஜெயா – மலேசியத் தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லாவின் பதவிக் காலம் குறைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதியோடு அவரது பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது.
அவரது பதவிக் காலக் குறைப்புக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் ஒருவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
புதிய தேர்தல் ஆணையத் தலைவரின் கீழ் பொதுத் தேர்தல் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமட் ஹாஷிம் அப்துல்லா 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக் காலத்தில் அவரது பல நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. பலத்த கண்டனங்களுக்கும் அவர் ஆளானார்.
தேசிய முன்னணிக்கு ஆதரவாகவும், ஒரு தலைப்பட்சமாகவும் அவர் செயல்பட்டார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படுகின்றன.
எனினும் கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றது என்பதே, தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாகும் என முகமட் ஹாஷிம் பல தருணங்களில் கூறியிருக்கிறார்.