Home நாடு பெர்லிஸ் இழுபறி முடிவு – ஆட்சிக் குழு பதவியேற்றது!

பெர்லிஸ் இழுபறி முடிவு – ஆட்சிக் குழு பதவியேற்றது!

1129
0
SHARE
Ad

ஆராவ் – நாட்டின் மிகச் சிறிய மாநிலமான பெர்லிஸ் மாநிலத்தில் நீடித்து வந்த அரசியல் இழுபறி ஒரு முடிவுக்கு வந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 13) தேசிய முன்னணி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சிராஜூடின் புத்ரா ஜமாலுலாய்ல் (படம்) முன்னிலையில் பதவியேற்றனர்.

பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் பெர்லிஸ் தேசிய முன்னணி தலைவரான ஷாஹிடான் காசிம் அவரது சகோதரரான இஸ்மாயில் காசிம் மந்திரி பெசாராக நியமிக்கப்பட பரிந்துரைத்திருந்தார்.

ஆனால், பெர்லிஸ் சுல்தானோ, ஒரு கைப்பொம்மை மந்திரி பெசார் நியமிக்க மாட்டேன் என்று கூறி, மற்றொரு தேசிய முன்னணி-அம்னோ சட்டமன்ற உறுப்பினரான அஸ்லான் மான் என்வரை பெர்லிஸ் மந்திரி பெசாராக நியமித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அஸ்லான் மான்னின் பதவியேற்பு சடங்கில் கலந்து கொள்ளாமல் மற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

ஷாஹிடான் காசிம் அஸ்லாம் மான்னை அம்னோவிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். எனினும் அந்த முயற்சியில் தோல்வியடைந்தார்.

ஒரு மாதமாக நீடித்த இழுபறி ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்து, மந்திரி பெசார் பதவியேற்பு விழாவை புறக்கணித்த சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்லிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஷாஹிடானின் தம்பி இஸ்மாயில் காசிம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

14-வது பொதுத் தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தின் 15 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றது.

தற்போது பெர்லிஸ் தவிர்த்து பகாங் மாநிலத்தில் மட்டுமே தேசிய முன்னணி ஆட்சியில் நீடிக்கிறது.