Home நாடு பெர்லிஸ் மந்திரி பெசார் நியமனம் – 9 தே.முன்னணி உறுப்பினர்கள் புறக்கணிப்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் நியமனம் – 9 தே.முன்னணி உறுப்பினர்கள் புறக்கணிப்பு

1201
0
SHARE
Ad
மந்திரி பெசாராக பதவி ஏற்கும் அஸ்லான் மான்

ஆராவ் (பெர்லிஸ்) – பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நெருக்கடி தணிந்து, இன்று வியாழக்கிழமை பெர்லிஸ் மந்திரி பெசாராக பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்லான் மான் பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சைட் சிராஜூடின் புத்ரா ஜமாலுல்லாய்ல் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

எனினும், தேசிய முன்னணியைச் சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அஸ்லானும் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்தான் என்றாலும், பெர்லிஸ் மாநில தேசிய முன்னணி மற்றொரு சட்டமன்ற உறுப்பினரை மந்திரி பெசாராகப் பரிந்துரை செய்திருந்தது.

3 பக்காத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மட்டுமே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

15 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் தேசிய முன்னணி மே 9 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களில் பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிமின் சகோதரரான டத்தோ இஸ்மாயில் காசிமும் ஒருவராவார். இவர் தம்புன் துலாங் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றார். இவரைத்தான் அடுத்த மந்திரி பெசாராக அம்னோ முன்மொழிந்திருந்தது.

எனினும், பெர்லிஸ் சுல்தான் இஸ்மாயில் காசிமை மந்திரி பெசாராக நியமிக்க பெர்லிஸ் சுல்தான் ஒப்புக் கொள்ளவில்லை. “அடுத்த மந்திரி பெசார் வெளியிலிருந்து அந்நிய குழுவினரால் கைப்பொம்மை போன்று ஆதிக்கம் செலுத்தப்படுவதை நான் விரும்பவில்லை” என பெர்லிஸ் சுல்தான் கூறியிருக்கிறார்.

பெர்லிஸ் மந்திரி பெசாரின் பதவி ஏற்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஷாஹிடான் காசிம், பெர்லிஸ் அம்னோவின் பரிந்துரைக்கு மாறாக மந்திரி பெசார் பதவியை ஏற்றுக் கொண்ட அஸ்லான் மான் அம்னோவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.