புத்ரா ஜெயா – பேங்க் நெகாரா மற்றும் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தின் கடன்கள் செலுத்தப்பட்டன என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று வியாழக்கிழமை மாலையில் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எந்த சந்தர்ப்பங்களில் அந்த பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்களையும் குவான் எங் வெளியிட்டார்.
நேற்று புதன்கிழமை 1எம்டிபி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அருள் கந்தாவையும் லிம் குவான் தனது அலுவலகத்தில் சந்தித்தார்.
அருள் கந்தா தந்த விளக்கங்களுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த லிம் குவான் எங் “அருள் கந்தா முழுமையாக நேர்மையற்றவர். நம்பகத் தன்மை அற்றவர். அவரது விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை. எனவே 1எம்டிபி தலைவர் என்ற அவரது பொறுப்பை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சின் சட்ட ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
1எம்டிபி நிறுவனத்தின் முதலீடுகள் எனக் கூறப்பட்டு வந்த 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 9.8 பில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான முதலீட்டு பங்குகள் இருக்கின்றனவா இல்லையா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அருள் கந்தா கூறியதாகவும் குவான் எங் நேற்று கூறியிருந்தார்.
பொதுத் தேர்தல் சமயத்தில் நாடு முழுக்க பயணம் செய்து 1 எம்டிபி நிதி நிலைமை வலுவாக இருக்கிறது எனப் பிரச்சாரம் செய்த அருள் கந்தா இப்போதோ அதற்கு நேர்மாறாக பேசுகிறார் என்றும் குவான் எங் சாடியிருந்தார்.