ஜோர்ஜ் டவுன் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காவல் துறைப் புகார்கள், சர்ச்சைகள் என சிக்கலில் இருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியிடம் தன்னிலை விளக்கத்தை ஜசெக தலைமைத்துவம் கோரியுள்ளது.
எனினும் இந்த விவகாரத்தில் இராமசாமியைத் தற்காத்துப் பேசியுள்ள பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ, இராமசாமி அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பே ஆச்சே (இந்தோனிசியா) மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தைகளில் இராமசாமி ஈடுபட்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார். எனவே, தனது நிலைப்பாடு குறித்து இராமசாமியே முறையான விளக்கத்தை வழங்க முடியும் என்றும் சௌ கோன் இயோ தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் முப்டி (இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொறுப்பாளர்) இராமசாமி விவகாரத்தில் ஜசெக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்துதான் ஜசெக இராமசாமியிடம் விளக்கம் கோரியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் நான் அல்ல என்று கூறியிருக்கிறார் இராமசாமி. சாகிர் நாயக்கை நாடு கடத்தாத மத்திய அரசாங்கத்தின் முடிவை இராமசாமி அண்மையில் வன்மையாகக் கண்டித்தார். அதைத் தொடர்ந்துதான் சாகிர் நாயக் விவகாரத்தில் நாடெங்கிலும் பல புகார்கள் இராமசாமி மீது காவல் துறையில் செய்யப்பட்டன.