Home நாடு சுங்கை காண்டிஸ் : சுறுசுறுப்பான வாக்களிப்பு

சுங்கை காண்டிஸ் : சுறுசுறுப்பான வாக்களிப்பு

825
0
SHARE
Ad
பிகேஆர் வேட்பாளர் சவாவிக்குப் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம்

ஷா ஆலாம் – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் சிலாங்கூர், சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. 19 வாக்களிப்பு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 109 வரிசைகளில் வாக்காளர்கள் காலை முதல் சுறுசுறுப்பாக வாக்களிக்கத் தொடங்கினர்.

51,217 வாக்காளர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத் தொகுதி கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதியாகும்.

18 பள்ளிகள் மற்றும் ஒரு சமூக மண்டபம் ஆகியவை வாக்களிப்பு மையங்களாகச் செயல்படுகின்றன. மாலை 5.30 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

#TamilSchoolmychoice

சுமார் 80 விழுக்காடு வாக்காளர்கள் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பர் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவர இரவு 10.00 மணியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ, பாஸ் இடையிலான கூட்டணி ஒத்துழைப்புக்கான முதல் களமாக சுங்கை காண்டிஸ் பார்க்கப்படுகிறது. 14-வது பொதுத் தேர்தலில் நேர் எதிர் முனைகளில் போட்டியிட்ட அம்னோவும், பாஸ் கட்சியும், சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர்த்தன. இந்தத் தொகுதியில் போட்டியிடாமல் பாஸ், அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது.

அதற்கு நன்றிக் கடனாக, அடுத்ததாக நடைபெறவிருக்கும் சிலாங்கூர், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, பாஸ் போட்டியிட விட்டுக் கொடுத்துள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தப் புதிய வியூகம் எந்த அளவுக்கு வாக்காளர்களிடையே ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை இன்றைய சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும் என்பதால்தான் இந்தத் தேர்தல் முடிவு மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.