Home நாடு “கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி பேராளருக்கு இடம்” – டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

“கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி பேராளருக்கு இடம்” – டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

1041
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஏழு பேர் இடம் பெற்றிருக்கும் நிலையில் அந்தக் குழுவில் இந்தியர் ஒருவரோ, தமிழ்க் கல்வி தொடர்பில் ஒருவரோ இடம் பெறாமல் இருப்பது இந்திய சமுதாயத்தில் பலத்த கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அறிவித்துள்ள,தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழியைப் பிரதிநிதிக்க, தமிழ் கல்விமான் ஒருவர் கூட இடம் பெறாதது ஏமாற்றத்தையும்,  வருத்தத்தையும் தருவதாக குறிப்பிட்டிருக்கும் குமரன் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமாவார்.

#TamilSchoolmychoice

“பக்காதான் அரசு இன அடிப்படையிலான ஆட்சி நடத்தவில்லை என்ற கொள்கையைக்
கொண்டிருந்தாலும், மொழிப் பிரச்சினைகள் இனப்பிரச்சினை அல்ல இரண்டு வெவ்வேறு என்பதனை அரசு உணரவேண்டும். எனவே தேசிய அளவில் அமைக்கப்படுகிற கல்விக்குழுவில் தமிழ் மொழிச் சார்ந்த கல்விமான் ஒருவர் இடம்பெறுவது அவசியமாகும்” என்றும் அவர் மேலும் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

“நம் நாட்டில் மழலையர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்ற காரணத்தினால் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி குறித்த கருத்தினை பகிர்ந்து கொள்ள தமிழ் கல்விமான் ஒருவர் இடம் பெற்றிருத்தல் அவசியம். அமைச்சரவையில் இன்று மூன்று தமிழர்கள்இடம்பெற்றுள்ளனர். தும்பைவிட்டு வாலைப் பிடிக்காமல், இவர்கள் தமிழ் மொழி கல்விமான் ஒருவரை தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இடம் பெறச் செய்ய உடனடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்” என்றும் குமரன்  தமிழ் அமைச்சர்களையும்,கல்வி அமைச்சரையும பொதுவாக
பக்காத்தான் அரசையும் கேட்டுக் கொண்டார்.