Home நாடு சீ பீல்ட் ஆலய இடமாற்ற விவகாரம் நவம்பர் 22 வரை ஒத்திவைக்கப்பட்டது

சீ பீல்ட் ஆலய இடமாற்ற விவகாரம் நவம்பர் 22 வரை ஒத்திவைக்கப்பட்டது

1079
0
SHARE
Ad

சுபாங் –  இன்று வியாழக்கிழமை உடைக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் சுபாங்கிலுள்ள சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இடம் மாறுவது தொடர்பான விவகாரம் எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம் தீபாவளிக்குப் பின்னர் இந்த விவகாரம் மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்புகளால் கையாளப்படும்.

ஆலயத்தை இடம் மாற்ற ஒப்புக் கொள்ளும் தரப்பு, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பு மற்றும் நில மேம்பாட்டாளர் தரப்பு என மூன்று தரப்புகளும் இடையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நெருக்கடியை இந்த ஒத்தி வைப்பு முடிவு சற்றே தணித்திருக்கிறது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணையமைச்சருமான ஆர்.சிவராசா “இனி ஆலயத்தின் நிர்வாகத்தை, ஆலயத்தைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுவின் தலைவர் எஸ்.ராமாஜி பொறுப்பேற்றுக் கவனிப்பார்” என அறிவித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் ஒரு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவிருக்கிறார் என்றும் சிவராசா தெரிவித்தார்.

இன்று சுமார் 6 மணி நேரத்திற்கு ஆலயத்திற்கு வெளியே திரண்ட ஆலய பக்தர்களுக்கும் குவிக்கப்பட்ட காவல் துறையினருக்கும் இடையில் நெருக்கடியான பதட்ட நிலை நிலவியது. அதன் பின்னரே இந்த ஒத்திவைப்பு முடிவு அறிவிக்கப்பட்டது.

ஆலயத்தில் நிலவிய தகராறுகள் முகநூல் மூலம் காணொளிகளாக மக்களிடையே பரப்பப்பட்டன. ஆலயத்தின் வாயில் கதவுகள் சாத்தப்பட்டிருந்ததோடு, மூல கர்ப்பக்கிருகத்திற்கான வாயிலும் சாத்தப்பட்டிருந்தது. ஆலயத்தின் பிரதான வாயிலின் அருகே ஆலய உடைப்புக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருபவர்கள் படுத்துக் கிடக்கும் காட்சிகளையும் முகநூல் காணொளிகள் எடுத்துக் காட்டின.

தற்போது ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் 2.7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாற்று இடத்தில் ஆலயத்தின் மூல விக்கிரகத்தைக் கொண்டு சென்று வைப்பதற்காக ஆலயத்தின் நிர்வாகம் திட்டமிடுவதாக மலேசிய இந்தியர் கல்வி உருமாற்ற சங்கத்தின் தலைவர் இளங்கோவன் அண்ணாமலை தெரிவித்தார்.

ஆலயத்தின் முன் கூடியிருந்த தரப்புகளின் பிரதிநிதிகள் நில மேம்பாட்டாளரால் ஆலயத்தின் முன் கொண்டுவரப்பட்ட ஒரு பேருந்தின் உள்ளே அமர்ந்து ஆலயப் பிரச்சனையைத் தீர்க்கப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

சுவாமி ராமாஜி, சிவராசா, சீபீல்ட் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் செல்லப்பா எல்.காளிமுத்து, புக்கிட் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ், எதிர்ப்புக் குழுவினரின் சார்பில் எம்.நாகராஜூ, ஒன் சிட்டி மேம்பாட்டுத் திட்டத்தின் மேம்பாட்டாளரின் பிரதிநிதி, மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான், மற்றும் வழக்கறிஞர்கள் பேருந்தினுள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகனும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பெற்றார்.

அடுத்ததாக சிலாங்கூர் மந்திரிபெசாருடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் நில மேம்பாட்டாளர், ஆலய நடவடிக்கைக் குழு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோருடன் தானும் கலந்து கொள்ளவிருப்பதாக சிவராசா கூறினார்.

இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது “ஆலயத்தை உடைபடுவதிலிருந்து காப்பாற்றத் தவறினால் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து மோகன் ஷான் பதவி விலக வேண்டும்” என டத்தோ டி.மோகன் கூறினார்.