Home இந்தியா சபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது

சபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது

1052
0
SHARE
Ad

சபரிமலை – தொடர்ந்து சபரிமலை விவகாரம் கேரளாவில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரையில் சுமார் 3,345 ஆர்ப்பாட்டக்காரர்கள் சபரிமலையில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவும் கேரளா அரசாங்கத்துக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்துசமய பாரம்பரியங்களையும், நம்பிக்கைகளையும் சிதைக்க கேரள அரசு முனைந்துள்ளது என்றும், நாடு முழுமையிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஐயப்பன் ஆலயங்களில் பெண்களுக்கு அனுமதி உண்டு என்றும், சபரிமலையில் மட்டும் ஐயப்பன் பிரம்மசாரியாக வீற்றிருக்கிறார் என்ற நம்பிக்கையாலும், அங்கு செல்பவர்கள் பிரம்மச்சரிய விரதம் இருந்து செல்கிறார்கள் என்ற காரணத்தாலும், 10-க்கும் 50-க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் அமித் ஷா பாஜக கூட்டம் ஒன்றில் பேசும்போது கூறினார்.

எல்லா வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரையும் ஒரு பெண்கூட சபரிமலை 18-ஆம் படியில் அனுமதிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

எனினும் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டது. எனினும் பக்தர்களின் தீவிர எதிர்ப்புப் போராட்டத்தினால் அவர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. இதுவரையில் 9 பெண்கள் சபரிமலை ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பெண்களை அனுமதிப்பதற்கு எதிராகப் போராடியவர்கள்தான் ஆயிரக்கணக்கில் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சபரிமலையின் தலைமை அர்ச்சகரும், ஆலய நிர்வாகத்தினரும்கூட பெண்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பையும் மீறி, பெண்களை அனுமதித்தால், ஆலயத்தின் கதவுகளைச் சாத்திவிட்டு நாங்கள் சென்றுவிடுவோம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் மிரட்டியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சபரிமலை ஆலயத்தின் நடை சாத்தப்பட்டது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீது மறு சீராய்வு மனுக்களை சில தரப்புகள் சமர்ப்பித்துள்ளனர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.