சுபாங் – சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிலம், நீர்வளம், இயற்கை வள அமைச்சரும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான சேவியர் ஜெயகுமார் மற்றும் கோடீஸ்வர வணிகர் வின்சென்ட் டான் இருவரும் வருகை தந்தார்கள்.
சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த, அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை நாமே பொதுமக்களிடம் நிதி திரட்டி வாங்குவோம் என வின்சென்ட் டான் அறிவித்திருந்தார். அந்த நிதிக்கு தனது பங்காக 5 இலட்சம் ரிங்கிட்டையும் வழங்குவதாக அவர் தெரிவிக்க அவரைத் தொடர்ந்து மேலும் இரு சீன வணிகர்கள் தலா 5 இலட்சம் ரிங்கிட் தருவதாக வாக்களிக்க தற்போது இந்த நிதிக்கு 15 இலட்சம் ரிங்கிட் சேர்ந்திருப்பதாக நேற்று வின்சென்ட் டான் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து வின்சென்ட் டான் சீ பீல்ட் ஆலயத்திற்கு சேவியர் ஜெயகுமாருடன் இன்று மாலை வருகை தந்து ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்தைப் பார்வையிட்டார். அங்கு குழுமியிருந்த பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உரையாடினார்.
தற்போது சீ பீல்ட் ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர்களான அயாலா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியைத் தனக்கு நன்கு தெரியும் என்றும் அவர் மதிப்புமிக்கவர், நிறைய அறப்பணிகள் செய்தவர் என்றும் வின்சென்ட் டான் கூறினார்.
“பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப் பழமையான, மிகப் பெரிய நிறுவனம் அயாலா கார்ப்பரேஷனாகும். அதன் உரிமையாளர்கள் மிகவும் நல்லவர்கள், மரியாதைக்குரியவர்கள், பொதுப் பணிகள் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்கள். அவர்கள் எனக்கு இந்த நிலத்தை வாங்குவதில் உதவி புரிவதோடு, அதற்கான விலையையும் கணிசமாகக் குறைப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் தங்களின் வணிகத்தை மலேசியாவில் நிலைநிறுத்தும் வகையில் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்” என இன்று ஆலயத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது வின்சென்ட் டான் தெரிவித்தார்.
சீ பீல்ட் ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கான உரிமையை ஒன் சிட்டி டெவலப்மெண்ட் சென்டிரியான் பெர்ஹாட் கொண்டிருக்கிறது. எம்சிடி பெர்ஹாட் (MCT Bhd) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஒன்சிட்டி டெவலெப்மெண்ட் நிறுவனமாகும்.
எம்சிடி பெர்ஹாட் (MCT Bhd) நிறுவனத்தில் 66.25 விழுக்காடு பங்குகளை பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக நிறுவனமான அயாலா நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த எம்சிடி நிறுவனத்தை அயாலா கார்ப்பரேஷன் கையகப்படுத்தியது.
இதுவரையில் 2 மில்லியன் சேர்ந்திருக்கிறது
நிலத்தை நாமே சொந்தமாக வாங்கிக் கொள்வோம் எனத் தான் தொடக்கிய பிரச்சாரத்தின் மூலம் இதுவரையில் 2 மில்லியன் ரிங்கிட் சேர்ந்திருப்பதாகவும் வின்சென்ட் டான் இன்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.