Home நாடு வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

1237
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் துறை அமைச்சர், பி. வேதமூர்த்தி பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற கண்டனக் கூட்டத்தின் போது பெர்காசா கேட்டுக் கொண்டது. கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவ்வியக்கத்தின் தலைவர் இப்ராகிம் அலி இவ்வாறு கூறினார். அச்சந்திப்பில் அமைச்சர் வேதமூர்த்தியை இப்ராகிம் அலி, தகாத சொற்களால் திட்டினார்.

வேதமூர்த்தியின் இக்குற்றச்சாட்டால் நாட்டில் இனங்களுக்கிடையே பதற்றச் சூழல் ஏற்பட்டுவிட்டதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். அவரின் இச்செய்கையால் மலாய்க்காரர்கள் பொறுமை இழந்து விட்டதாகவும், இனி இவ்வாறு நடந்தால் அதனை அந்த இயக்கம் தட்டிக் கேட்கும் எனவும் அறிவித்தார்.

பிரதமர் தனது அமைச்சரவையில் இந்திய அமைச்சர்களின்  ஒதுக்கீட்டை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் இப்ராகிம் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இந்நாட்டின் மக்கள் தொகையில் 7 விழுக்காடு மட்டுமே இருக்கும் இந்தியர்களுக்கு, ஏன் நிறைய அமைச்சர் பதவிகள் தரப்பட்டு அதன் எண்ணிக்கை கூடுதலாக இருக்க வேண்டும் எனும் கேள்வியையும் இப்ராகிம் முன் வைத்தார்.

அக்கூட்டத்திற்குப் பின்பு நடைபெற்ற அவ்வியக்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய இப்ராகிம் ஐசெர்ட் (ICERD – International Convention on the Elimination of All Forms of Racial Discrimination) எனப்படும் இனபேதங்களை ஒழிக்கும் அனைத்துலக உடன்பாட்டை எக்காலத்திலும் தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை எனக் கூறினார்.

வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெற இருக்கும் ஐசெர்ட் குறித்த எதிர்ப்புப் பேரணியில் தன் இயக்கத்தினைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.