Home நாடு ஐசெர்ட் பேரணி : காலை 11.00 மணிவரை 7 ஆயிரம் பேர் திரண்டனர்

ஐசெர்ட் பேரணி : காலை 11.00 மணிவரை 7 ஆயிரம் பேர் திரண்டனர்

1182
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (மதியம் 12.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வதற்காக பலரும் காலை முதல் கோலாலம்பூரின் தெருக்களில் குழுமத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பேரணி குறித்த அண்மையத் தகவல்கள் வருமாறு:

  • முதலில் ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் பேரணி பின்னர் ஐசெர்ட் உன்பாட்டில் கையெழுத்திடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக அறிவிக்கப்பட்டது.
  • இன்று காலை 11.00 மணி வரை சுமார் 7 ஆயிரம் பேர் கோலாலம்பூர் தெருக்களில் கூடியுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண் அறிவித்தார்.
  • மலாய் தற்காப்புக் கலையான சீலாட் பயற்றுவிக்கும் குழுக்கள் அனைவரும் இணைந்து இன்று காலை மாமன்னர் மாளிகை சென்று அங்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர். ஐசெர்ட் விவகாரம் இனியும் எழுப்பப்படக் கூடாது என்றும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் இனியும் விவாதிக்கக் கூடாது என்றும் அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • சீலாட் குழுக்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாமன்னரின் அரண்மனைப் பிரதிநிதி, பதிலுக்கு அவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கியிருக்கின்றனர்.
  • அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள் புத்ரா உலக வாணிப மையத்தில் ஒன்றுகூடுவார்கள் என்றும் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக டத்தாரான் மெர்டேக்கா அமைந்திருக்கும் ஜாலான் ராஜா சாலையைச் சென்றடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதனைத் தொடர்ந்து தலைநகரின் பல சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன அல்லது திசை திருப்பி விடப்பட்டிருக்கின்றன.
  • பேரணி நடத்துபவர்கள் அமைதியான முறையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்காத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என காவல் துறைத் தலைவர் புசி ஹருண் கேட்டுக் கொண்டுள்ளார்.