கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் காணொளி பரவலாக சமூக பக்கங்களில் பரவி வருவதை விஸ்மா புத்ரா கண்டித்துள்ளது. மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக இந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
எல்லி பாமாதோங் என்பவரின் ஆதரவாளர்கள் சிலர் ஜனவரி 19 மற்றும் 21-இல் இச்செய்கையை செய்ததாக அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஒரு நாட்டின் கொடியென்பது, அந்நாட்டின் புனிதத்திற்கு உட்பட்டது என்றும், தேசிய சின்னமாக கொண்டாடப்படும் அதற்கு மரியாதையை வழங்க வேண்டும் எனவும் அமைச்சு கூறியது.
அத்தகைய நடவடிக்கைகளும், பொறுப்பற்ற எதிர்ப்பு கருத்துகளும் ஆதாரமற்றவை என விஸ்மா புத்ரா அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து பிலிப்பைன்ஸ் அரசு கடுமையான நடவடிக்கையை அப்போராட்டவாதிகளின் மீது எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அவ்வாறு செய்யத் தவறினால், மலேசியாவிற்கும் பிலிப்பைன்ஸ்சிற்கும் இடையிலான உறவு பாதிக்கும் எனவும் அது அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.