கோலாலம்பூர்: தாமான் கெராமாட் தேசியப் பள்ளி சுற்றுண்டிச் சாலையில் ஓய்வு நேரத்தில் உணவு உட்கொண்ட 49 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அப்பள்ளியின் சிற்றுண்டிச் சாலை நேற்று (வியாழக்கிழமை) மூட உத்தரவிடப்பட்டது.
சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராகிம் கூறுகையில், இதுவரையிலும் 22 மாணவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றிருப்பதாகவும், மேலும் 27 பேர்களுக்கு சாதாரண அறிகுறிகள் இருந்ததாகவும், அவர்கள் சுகாதார மையங்களில் சிகிச்சை பெறவில்லை எனவும் கூறினார்.
“இந்த சம்பவம் குறித்த காரணத்தைக் கண்டறிய கொம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை பகுப்பாய்வு நோக்கங்களுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1988-ஆம் ஆண்டுக்கான தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டுள்ளது என அவர் விளக்கினார்.