கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையத் தள உரிமையாளரும், ஆசிரியருமான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்தது யார் என்பது தனக்குத் தெரியும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார்.
முன்னதாக, பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இந்தப் பணப் பரிமாற்றம் குறித்த ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கணக்காய்வுத் துறை நிபுணரான ரபிசி ரம்லி தீவிரமாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆராய்ச்சி செய்து, எந்த வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணம் செலுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தார். அந்த வங்கிக் கணக்கில் தனது சொந்தப் பணமான 10 ரிங்கிட்டை இணையம் வழியாக செலுத்துவதில் வெற்றி கண்ட ரபிசி, அதன் மூலம் அந்த வங்கிக் கணக்கு போலியானது அல்ல, உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஓர் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர்தான் இந்தப் பணத்தை வழங்கினார் என்றும் அவர் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கிற்கு நெருக்கமான நண்பர் என்றும் கூறப்படுகிறது.