கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார்.
முன்னதாக, பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரிடமுள்ள ஆதாரங்களை வெளிப்படுத்தினால் மட்டுமே, இது குறித்து கருத்துரைக்க விரும்புவதாக கூறிய அவர், தற்போது இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் காசோலையை சரவாக் ரிப்போர்ட் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இரு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து இரகசியம் காப்பதாக இருந்தால், சரவாக் ரிப்போர்ட் இந்த பணத்தை பெற்றுக் கொள்ளும் என தெரிவித்ததாக கிளேர் குறிப்பிட்டார். இம்மாதிரியான விவகாரங்களில், இரகசியம் காப்பது இயல்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதினால், நேரத்தையும் பணத்தையும் இரு தரப்பினரும் செலவு செய்ய வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.