ரந்தாவ்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரந்தாவில் இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் தங்களை முழுமையாக பிரதிநிதிக்கும் வேட்பாளர் ஒருவரை வேண்டுவதாகக் தெரிய வந்துள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியின் போது தாங்கள் உதவி என்று கேட்டது மட்டுமே மிஞ்சி உள்ளதாகவும், நடப்பு அரசாங்கம் வந்தும் இன்னும் அவர்களது பிரச்சனைகள் தீராமல் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
உணவு விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள, 38 வயது சுசீலா கூறுகையில், இம்முறை தங்களுக்கு, வேலைவாய்ப்பு, சுகாதாரம், முதியோர் நலன், போன்ற விவகாரங்களைநல்ல முறையில் செய்து தரக்கூடிய தலைமைத்துவத்தைதான் தேர்ந்தெடுப்போம் எனக் கூறினார்.
கடந்த கால அரசாங்கத்திடம் பலமுறை முதியோருக்கான உதவியை நாடிச் சென்றும், இதுநாள் வரையிலும் அது கிடைக்காமல் போனதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 5,336 ஆகும். மலாய்க்காரர்கள் சுமார் 11,283 பேரும், சீன வாக்காளர்கள் சுமார் 3,849 பேரும் உள்ளனர்.