Home இந்தியா இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ – ‘இசையா’?

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ – ‘இசையா’?

1109
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

முத்தெடுப்பதற்கும், தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகராகவும் புகழ்பெற்ற தூத்துக்குடி, அண்மைய சில மாதங்களாக வேறு சில காரணங்களுக்காக பிரபலமாகி விட்டது. சுற்றுச் சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் ஸ்டெரிலைட் ஆலை – அதனை மூட நடத்தப்பட்ட போராட்டங்களினால் பொதுமக்களில் 13 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது – போன்ற காரணங்களால் கொந்தளிப்பு நகராக உருமாறிய தூத்துக்குடியை குறிவைத்து களமிறங்கியிருக்கின்றனர் திமுகவின் கனிமொழி கருணாநிதியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும்!

வெற்றி வாய்ப்பு கனிமொழிக்குத்தான் என பரவலாகக் கூறப்பட்டாலும், அதிமுக-பாஜக கூட்டணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழிசையின் தந்தையார் குமரி அனந்தன் இந்த வட்டாரத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவர் என்பதால், தமிழிசைக்கு அதன் மூலமான வாக்குகளும் வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

#TamilSchoolmychoice

இரண்டு வேட்பாளர்களும், தூத்துக்குடியில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத் தேர்தல்களில் சாதியின் சார்பில் வாக்குகள் விழுவதும், வாக்கு வேட்டையாடப்படுவதும் புதிதல்ல! தூத்துக்குடியும் அதற்கு விதிவிலக்கல்ல!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி தவிர்த்து வேறு சில முக்கிய வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். டிடிவி தினகரன் கட்சியான அமமுக சார்பில் புவனேஸ்வரன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்.குமரன், நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜா சேகர் ஆகியோரும் போட்டியிடும் இந்தத் தொகுதியில் முன்னணி நட்சத்திர வேட்பாளர்களாகப் பார்க்கப்படுவது தமிழிசையும், கனிமொழியும் தான்!

பொதுவாக, ஒவ்வொரு தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளிலும், அமமுகவும், கமலின் மக்கள் நீதி மய்யமும் எத்தனை வாக்குகளைப் பெறப் போகிறார்கள் – எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார்கள் – யாருக்குப் பாதகமாக வாக்குகளைப் பிரிக்கப் போகிறார்கள் – என்பதை வைத்துத்தான் திமுக -அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.

அதே நிலைமைதான் தூத்துக்குடிக்கும்!

கனிமொழிக்கு இன்னொரு சவாலும் இருக்கிறது. கனிமொழி அபாரமாக, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அவரது கை கட்சியில் ஓங்கிவிடும், ஸ்டாலினுக்கு நிகராகப் பார்க்கப்படுவார், ஸ்டாலினின் மகன் உதயநிதிக்குப் போட்டியாக கனிமொழி வளர்ந்துவிடுவார் என்றெல்லாம் திமுகவில் உட்கணக்குகள் போடப்படுகின்றன. இதன் காரணமாக, திமுகவினர் தரப்பிலேயே கனிமொழிக்கு எதிராக உள்குத்து வேலை நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அது கனிமொழியின் வெற்றியையே பாதிக்குமா அல்லது வாக்குகளை மட்டும் கணிசமாகக் குறைக்குமா என்பது தேர்தல் முடிவுகள் மூலமே தெரியவரும்.

தமிழிசையை வீழ்த்தினால் அதன் மூலம் கனிமொழியின் செல்வாக்கும், பிரபலமும் அகில இந்திய அளவில் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

கலைஞர் மு.கருணாநிதியின் காலகட்டத்தில் மத்தியில் – புதுடில்லியில் – முரசொலி மாறன் திமுக பிரதிநிதியாக செயல்பட, தமிழகத்தில் தனது தலைமையை வலிமையாக வைத்திருந்தார் கலைஞர். அதன்பின்னர் தற்போது  ஸ்டாலினும் அதே நடைமுறையைப் பின்பற்றத் திட்டமிடுகிறார்.

ஏற்கனவே, மாநிலங்களவை (இராஜ்ய சபா) உறுப்பினராக இருக்கும் கனிமொழி தூத்துக்குடியில் வென்றால், புதுடில்லியில் திமுகவின் ஏகபோக பிரதிநிதியாகச் செயல்படுவார்.

நட்சத்திரத் தொகுதியான தூத்துக்குடியில் – அங்கு அரங்கேறிய சம்பவங்களால் – கனிமொழியே தூத்துக்குடி தொகுதியில் வெல்வார் என்பதே பொதுவான கருத்துக் கணிப்பு.

-இரா.முத்தரசன்