(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
பிரபல இந்தி நட்சத்திரங்களின் வாரிசுகளும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் வாரிசுகளும் என குடும்பப் பின்னணி வலிமை காரணமாகவே நடிகர் நடிகையர் ஆதிக்கம் செலுத்தும் இந்தித் திரையுலகில் எந்தவித சினிமாப் பின்னணியும் இல்லாமல் 1990-ஆம் ஆண்டுகளில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தார் அந்தப் புதுமுக நடிகை. சாதாரண ஆட்டோவில் பயணம் செய்து ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக – இயக்குநர் அலுவலகமாக – ஏறி இறங்கினார் அந்தப் புதுமுகம்.
சிறு சிறு பாத்திரங்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. ஊர்மிளா மதோண்ட்கர் என்ற அந்த இளம் நடிகையின் அழகும், கவர்ச்சியும், ராம்கோபால் வர்மா என்ற பிரபல இயக்குநரின் கண்களில் பட, 1995-ஆம் ஆண்டில் ‘ரங்கீலா’ என்ற தனது இந்திப் படத்தில் அவரைக் கதாநாயகியாக்கினார் ராம்கோபால் வர்மா.
ரங்கீலா படம்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் முதல் நேரடி இந்திப்படம். மணிரத்னத்தின் ‘ரோஜா’ படப் பாடல்கள் மூலம் ஏற்கனவே இந்தி இரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த ரஹ்மான் அதிரடியான பாடல்களை ரங்கீலா படத்துக்கு அமைத்துக் கொடுத்தார்.
ரஹ்மானின் பாடல்களைக் கொண்டாடிய இரசிகர்கள் ரங்கீலாவில் தூக்கலாகக் கவர்ச்சி காட்டிய ஊர்மிளாவையும் இரசித்துக் கொண்டாடினர். மாபெரும் வெற்றிப் படமானது ரங்கீலா.
பின்னர் பல இந்திப் படங்களில் நடித்த ஊர்மிளா தமிழில் கமல்ஹாசனுடன் ஷங்கரின் இந்தியன் படத்திலும் ஒரு கதாநாயகியாக நடித்தார்.
இடையில் சில ஆண்டுகள் சினிமா வட்டாரத்திலிருந்து காணாமல் போனார். இந்த ஆண்டில் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஊர்மிளா இந்தப் பொதுத் தேர்தலில் மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
48 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவும், சிவசேனாவும் வலிமையான கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி சில நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்வதற்கு நம்பியிருப்பது ஊர்மிளா போன்ற சினிமா பிரபலங்களைத்தான்!
2014 பொதுத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியை வென்ற கோபால் ஷெட்டியை மீண்டும் பாஜக களமிறக்க, அவரைத் தோற்கடிக்க காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்தான் ஊர்மிளா. அண்மையில் ராகுல் காந்தியைச் சந்தித்துக் காங்கிரசில் சேர்ந்த அவருக்கு உடனடியாக தொகுதி ஒதுக்கப்பட்டது, காங்கிரசில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ரங்கீலா படத்தில் கவர்ச்சித் துள்ளாட்டம் போட்டு இரசிகர்களை மயக்கி அவர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட ஊர்மிளா, தற்போது தனது 45 வயதில் அரசியல் களம் காண்கிறார்.
காங்கிரசுக்கு வெற்றியைத் தேடித் தருவாரா? அல்லது பாஜக-சிவசேனா என்ற வலிமையான கூட்டணி முன் தோல்வியைத் தழுவுவாரா?
-இரா.முத்தரசன்