Home நாடு இந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை

இந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை

956
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பல இன மக்கள் ஒருங்கிணைந்து வாழும் மலேசியாவில், மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் முஸ்லீம் குழுவினர் இந்து, கிறிஸ்துவ, புத்த ஆலயங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) நல்லெண்ண வருகை ஒன்றை மேற்கொண்டனர்.

குளோபல் யுனிடி நெட்வோர்க் என்ற அமைப்பின் தலைவரான ஷா கிரிட் ககுலால் கோவிந்த்ஜி, 22 பேர் கொண்ட குழுவினர் இந்த வருகையை மேற்கொண்டனர் எனத் தெரிவித்தார்.

தலைநகர் கம்போங் காசிப்பிள்ளையில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம், செந்தூலில் உள்ள செயிண்ட் ஜோசப் கிறிஸ்துவ தேவாலயம், செந்துல் ஸ்ரீ ஜெயந்தி புத்தர் ஆலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு அவர்கள் வருகை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

“நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம் அல்லாதவர் தங்களின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தினர். அதே போன்று இப்போது கொழும்புவில் கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டிருக்கும்போது நாம் நமது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும்” எனவும் ஷா கிரிட் தெரிவித்தார்.

செயிண்ட் ஜோசப் தேவாலயத்திற்கான வருகையின்போது அப்போது நடைபெற்ற வழிபாட்டையும் உடனிருந்து பார்வையிட்ட முஸ்லீம் குழுவினர், பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரிடமும் கலந்துரையாடினர்.

வருகை தந்த முஸ்லீம் குழுவினருக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் ஹலால் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் புத்த ஆலயத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.