கோலாலம்பூர்: நிதியமைச்சர் லிம் குவான் எங்கை நாடாளுமன்றத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் பரிந்துரைக்கும் எதிர்க்கட்சியின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நிராகரித்தார்.
திருப்பிச் செலுத்துவதற்காக இருந்த பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்ற லிம்மின் முந்தைய குற்றச்சாட்டின் காரணமாக இது முன்வைக்கப்பட்டது.
“பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் சபையை தவறாக வழிநடத்தியதற்கான காரணத்தை அறிய இயலவில்லை. எனவே, விதிமுறை 36 (12) இன் கீழ் அது வரவில்லை” என்று அவர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தேசிய பொதுக் கணக்குக் குழு (பிஏசி) அறிக்கையின் உள்ளடக்கங்களையும் பரிசீலித்ததாக அரிப் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி பணம் இழக்கப்படவில்லை என்று பிஏசி அறிக்கை கண்டறிந்ததை அடுத்து, லிம் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் பரிந்துரைக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சமர்ப்பித்தார்.
பிஏசி நடவடிக்கைகளில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று இஸ்மாயில் கூறினார். அதற்கு பதிலாக ஜிஎஸ்டி பணத்தை “கொள்ளையடிக்கப்பட்டது” மற்றும் “திருடப்பட்டது” என்று குற்றம் சாட்டிய லிம் வார்த்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாக மட்டுமே நாங்கள் இந்த நடவடிக்கையை கோருகிறோம் என்று கூறினார்.