கோலாலம்பூர் – தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும் பாஸ் கட்சியின் ஆதரவு குழுக்களும் பாதுகாப்பையும், பண உதவியையும் செய்து வருகின்றன என இந்திரா காந்தியின் தரப்பில் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜாகிர் நாயக்கைத் தற்காத்த சம்ரி வினோத் தொடர்ந்து அந்த விவகாரம் தொடர்பாக பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திடம் தெரிவித்த கருத்துகளில் முகமட் ரிடுவான் அப்துல்லாவின் செய்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
சம்ரி வினோத், ஜாகிர் நாயக்கின் மாணவராவார்.
“ஜாகிர் நாயக்கின் பல ஆதரவாளர்கள் முகமட் ரிடுவான் செய்ததை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லீம் அல்லாத குழந்தை இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டால் அந்தக் குழந்தைக்கும் அதன் தாயாருக்குமான உறவில் எந்தவித மாற்றமுமில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரை அந்தத் தாயார் தொடர்ந்து குழந்தையின் தாயாகச் செயல்படுவார். எனவே, ஒரு குழந்தையை அதன் தாயாரிடமிருந்து பிரிக்கும் செய்கையை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். ஆதரிக்கவும் மாட்டேன்” எனவும் சம்ரி வினோத் கூறியிருக்கிறார்.
“தனது மகள் உண்மையான மதப் பாதையை பின்பற்ற வேண்டும் என ரிடுவான் அப்துல்லா (இந்திரா காந்தியின் கணவர்) விரும்புகிறார் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்கான சரியான பாதை இதுவல்ல” என்றும் கூறிய சம்ரி மாறாக, ரிடுவான் இந்திராவுடன் பேசி சமரசமான முறையில் இந்திராவின் மகள் இந்துவாக இருந்தாலும் தொடர்ந்து இஸ்லாம் குறித்து போதித்து வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்திராவின் மகள் இரண்டு மதங்கள் குறித்தும் அறிந்திருப்பார். பதின்ம வயதை அடைந்ததும் அவரே எந்த மதம் தனக்கு ஏற்றது என்பதை முடிவு செய்திருப்பார்” என்றார்.
“இஸ்லாம்தான் உண்மையான பாதை என நாம் நம்பினால், நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நமது குழந்தைகளுக்கு நாம் கற்பித்தால் போதும். அவர்கள் தாங்களாகவே தங்களின் பாதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். உண்மையிலேயே இது ஒரு குடும்பப் பிரச்சனை. இந்திராவுக்கும் ரிடுவானுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மூலம் இதனைத் தீர்த்திருக்க முடியும்” என்றும் சம்ரி வினோத் தெரிவித்தார்.
இந்திரா காந்திக்கும் அவரது கணவர் ரிடுவானுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து ஒரு வயதான பிரசன்னா 2009-இல் இந்திராவிடம் இருந்து பிரிக்கப்பட்டு ரிடுவானால் கொண்டு செல்லப்பட்டார். இதுவரையில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றப் போராட்டம் நடத்திய இந்திரா காந்திக்கு ஆதரவாக கூட்டரசு நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஒரு குழந்தை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகிறதென்றால் அதற்கு தந்தை, தாயார் இருவரின் ஒப்புதலும் தேவை என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ரிடுவானையும் பிரசன்னாவையும் கண்டுபிடிக்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் பிரசன்னாவை இந்திரா காந்தி வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
ரிடுவானையும், பிரசன்னாவையும் தேடிக் கண்டுபிடிப்பதில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என காவல் துறை தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் அண்மையில் அறிவித்திருந்தார்.