சிங்கப்பூர் – சிங்கையில் இயங்கி வரும் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைப் பிரிவு ஒவ்வொரு ஆண்டிலும் மறைந்த குறிப்பிடத்தக்க தமிழ் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் தமிழ்ச் சேவைகளை நினைவு கூரும் வகையிலும் ‘நினைவின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
மறைந்த தமிழ் படைப்பாளர்கள் குறித்த இரங்கல் உரைகளை அவர்களை நேரடியாக அறிந்தவர்களும், அவர்களின் எழுத்துப் படைப்புப் பணிகளை அறிந்தவர்களும் வழங்குவர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு மலேசிய எழுத்தாளர்கள், எம்.துரைராஜ், இராஜகுமாரன் ஆகிய இருவருக்கும் இந்த நிகழ்ச்சியில் இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் அண்மையில் மறைந்த மலேசிய எழுத்தாளர்கள் அக்கினி சுகுமார் மற்றும் மா.இராமையா ஆகிய இருவருக்கும் நினைவஞ்சலி உரை நிகழ்த்தப்படவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டடத்தின் 16-வது தளத்தில் உள்ள ‘போட்’ (The Pod) மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நினைவு கூரப்படவிருக்கும் ஆளுமைகள் பின் வருமாறு:
- பிரபஞ்சன்
- சிலம்பொலி சின்னப்பன்
- க.ப.அறவாணன்
- மகரிஷி
- தோப்பில் முகம்மது மீரான்
- கிரேசி மோகன்
- அக்கினி சுகுமாரன்
- மா.இராமையா
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மா.இராமையா தனது 86-வது வயதில் கடந்த புதன்கிழமை நவம்பர் 13-ஆம் தேதிதான் காலமானார் என்பதால் அவரையும் கௌரவிக்கும் பொருட்டு அவருக்கான நினைவஞ்சலி உரையும் இறுதி நேரத்தில் நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டுள்ளது.