சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த அந்த சந்திப்பு தொடர்பில் செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினர்களில் ஒருவரான லோக்மான் நூர் அடாம் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு இது கட்சி விரோதச் செயல் என்றும் சாடியுள்ளார்.
நேற்றைய சந்திப்பை வியூகத்தோடு திட்டமிட்டதே ஹிஷாமுடின்தான் என்ற லோக்மான் “ஹிஷாமுடின் மலேசியர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றியிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் தேசிய முன்னணி மீது அபார நம்பிக்கை வைத்து தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த வாக்காளர்களுக்கு இது துரோகம் இழைக்கும் செயலாகும்” என்றும் லோக்மான் கூறியிருக்கிறார்.
அஸ்மின் அலி – அன்வார் மோதல்
அன்வாருடன் அரசியல் பகைமை பாராட்டி வரும் அஸ்மின், மகாதீருக்கான இடைத் தரகராக செயல்பட்டு வருகிறார் எனவும் லோக்மான் குற்றம் சாட்டினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ஒன்று விட்ட சகோதரரான (நஜிப்பின் தாயாரும், ஹிஷாமுடின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள்) ஹிஷாமுடின் எத்தகைய உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களிடையே குழப்பமான ஒன்றாக இருக்கிறது.
நஜிப்புக்கு நெருக்கமானவரான அவர் நஜிப்பை வழக்கு விவகாரங்களில் இருந்து காப்பாற்ற வியூகம் வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது,
சில நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அம்னோவிலிருந்து வெளியேறப் போகிறாரா?
அல்லது அம்னோவையும் பெர்சாத்துவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப் போகிறாரா?
அல்லது அஸ்மினை அடுத்த பிரதமராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரா?
என்பது போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து அம்னோ தலைமைத்துவம் ஹிஷாமுடின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா அல்லது பிகேஆர் தலைமைத்துவம் அஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
இதற்கிடையில் பிகேஆர் கட்சிக் கூட்டங்களைத் தொடர்ந்து தவிர்த்து வரும் அஸ்மின் நாளை புதன்கிழமை நடைபெறும் பிகேஆர் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்று பத்திரிகையாளர்கள் விடுத்த கேள்விக்கு தனது நேர அட்டவணையைப் பார்த்து முடிவு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
-இரா.முத்தரசன்