Home One Line P2 ஜேக் மா : 8.2 பில்லியன் டாலருக்கு பங்குகளை விற்றார்

ஜேக் மா : 8.2 பில்லியன் டாலருக்கு பங்குகளை விற்றார்

676
0
SHARE
Ad

ஷாங்காய் : அலிபாபா நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜேக் மா (படம்) தனது பங்குகளை விற்றதின் மூலம் 8.2 பில்லியன் அமெரிக்கா டாலர்களை ஈட்டியிருக்கிறார்.

சீனாவின் இணைய வணிக நிறுவனமான அலிபாபா உலக அளவில் இணைய வணிகத்தில் முன்னணி வகிக்கிறது. கொவிட்-19 காரணமாக இணையம் வழியான வணிகப்பரிமாற்றங்கள் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகளும் பன்மடங்கு அதிகரித்தன.

இதுவரையில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதிப்பில் அலிபாபா பங்குகள் கட்டம் கட்டமாக உயர்வு கண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக தனது பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்து வந்திருக்கிறார் ஜேக் மா. சுமார் 8.2 பில்லியன் டாலர்கள் மதிப்புடையை பங்குகளை அவர் விற்றிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

6.2 விழுக்காட்டுப் பங்குகளை ஏற்கனவே அலிபாபாவில் கொண்டிருந்த ஜேக் மா இதன் மூலம் தனது பங்கு விழுக்காட்டை 4.8 ஆக குறைத்துக் கொண்டுள்ளார். அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

அவர் எந்த விலையில் தனது பங்குகளை விற்றார் என்பது தெரியவில்லை. நடப்பு பங்குச் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடும்போது அந்தப் பங்குகளின் மதிப்பு 8.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

ஜேக் மா அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்தவர். அதன் நிருவாகத் தலைவராகவும் இருந்தவர். தனது 55-வது வயதிலேயே அந்நிறுவனத்தை மற்ற பங்குதாரர்களிடமும், சிறந்த நிருவாகத் திறன் கொண்டவர்களிடமும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

பதவி விலகிய பின்னர் தனது நேரத்தை அறப்பணிகளில் செலவிடப் போவதாக அவர் அறிவித்தார். கொவிட்-19 காலகட்டத்தில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய மருத்துவ உபகரணங்களைத் தனது தனிப்பட்ட அறநிறுவனங்கள் மூலம் அவர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் அலிபாபாவின் இணைய வணிகம் சீனாவின் மொத்த சில்லறை வணிகத்தில் ஆறில் ஒரு பங்காகும் என மதிப்பிடப்பட்டது.

எல்லா வணிகங்களும், பயனர்களும் இணையப் பரிமாற்றத்தை நோக்கித் தற்போது நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அலிபாபாவின் வணிகம் அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் பன்மடங்கு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 பாதிப்புகள் எதிர்காலத்தில் குறைந்து விட்டாலும் இனிமேல் இணையவழி வணிகங்கள்தான் வழக்கமான ஒன்றாக மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி விடும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

அலிபாபாவின் தற்போதைய சந்தை மதிப்பு 705 பில்லியன் டாலராகும். பேஸ்புக்கை விட கூடுதலான சந்தை மதிப்பை அலிபாபா கொண்டிருக்கிறது.

ஜேக் மா’வுக்குப் பதிலாகத் தற்போது டேனியல் சாங் (Daniel Zhang) என்பவர் தற்போது அலிபாபாவின் தலைவராக வழிநடத்தி வருகிறார்.

ஜேக் மா வழங்கிய அறப்பணிகள்

மகாதீர் பிரதமராக இருந்த வேளையில் அலிபாபா நிறவனத்திற்கு வருகை தந்தபோது அவருடன் ஜேக் மா

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையத்தில் ஜேக் மா தனது அறிக்கை ஒன்றைப் பதிவு செய்தார். அதில் தனது அறப்பணி காரியங்களுக்காக அடுத்த ஓராண்டில் 21 மில்லியன் பங்குகளை விற்பனை செய்யப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கொவிட்-19 பாதிப்புகள் பரவி வந்த காலகட்டத்தில், ஜேக் மா தனது அறக்கட்டளையின் மூலம் 100 மில்லியன் யுவான் (58.92 மில்லியன் ரிங்கிட்) நன்கொடையை, கொரொனா நச்சுயிரிக்கு எதிராக புதிய தடுப்பு மருந்தை உருவாக்க அளித்துள்ளார்.

இரண்டு சீன அரசாங்க ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இந்த நிதி நன்கொடையாக வழங்கப்படுவதாகவும் அவரது சார்பில் அறிவிக்கப்பட்டது.

மார்ச் மாத வாக்கில் தனது அறக்கட்டளை மூலம் மலேசியா, இந்தோனிசியா, தாய்லாந்து மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவப் பொருட்களை ஜேக் மா நன்கொடையாக வழங்கினார்.

ஜேக் மா அறக்கட்டளை 2 மில்லியன் முகக் கவசங்கள், 150,000 மருத்துவ உபகரணங்கள், 200,000 பாதுகாப்பு உடைகள், உள்ளிட்டப் பொருட்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தது.