Home One Line P1 அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!

அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அல் ஜசீரா வெளியிட்டுள்ள “லோக்ட் அப் இன் மலேசியாஸ் லோக்டவுன்” என்ற சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் அனுமதி பெற்றுள்ளதா என்று ஆராயப்படும்.

மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியத்திடமிருந்து (பினாஸ்), அந்நிறுவனம் அனுமதி பெற்றதா என்பதை தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

நாட்டின் ஒவ்வொரு திரைப்படம், ஆவணப்படம் தயாரிப்பதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்று என்று அதன் அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டில் செயல்பட அனைத்துலக ஊடகங்களின் அனுமதியை உள்ளடக்கிய அல் ஜசீரா அங்கீகார அனுமதியையும் அமைச்சகம் சரிபார்க்கும் என்று அவர் கூறினார்.

“பினாஸைப் பொறுத்தவரை, உங்களிடம் உரிமம் இருந்தால், அது சரி, உரிமம் இல்லாவிட்டால் அது தவறாக கருதப்படுகிறது, “என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அனைத்துலக ஊடகங்கள் அங்கீகார நிபந்தனைகளை மீறினால், காவல் துறை விசாரணையின் முடிவுகளைப் பெற்ற பிறகு, நாங்கள் அங்கீகாரத்தை இரத்து செய்கிறோம். அங்கீகாரத்தை இரத்து செய்வதன் மூலம், அவர்கள் எந்த காரணத்திற்கும் எங்கும் செல்ல சுதந்திரமில்லை. காரணம் ஊடக அட்டை தகவல் துறையால் வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

மலேசியாவை இழிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து அல் ஜசீரா மீது காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சேவை செய்வதில் பாகுபாடு காட்டுவதாக 20.25 நிமிடங்கள் கொண்ட ‘லோக்ட் ஆப் இன் மலேசியாஸ் லோக்டவுன்’ என்ற காணொளி அறிக்கையில் அல் ஜசீரா கூறியிருந்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதிகாரிகள் வெளிநாட்டினரைக் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அண்மையில், இது குறித்து பேசிய தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகள் பொய் என்று கூறியிருந்தார்.

அல் ஜசீரா செய்தி நிறுவனம் நெறிமுறையற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. தடுத்து வைத்தது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், இந்த ஆவணப்படம் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு அல் ஜசீரா ஊழியர்கள் காவல் துறையால் அழைக்கப்பட்டிருந்தனர்.

25 பேர் 25 நிமிட ஆவணப்படம் தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அல்ஜசீரா நிர்வாகம் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தற்காத்து, ஆவணப்படத்திற்கு எதிர்வினையைத் தொடர்ந்து அதன் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடையூறு குறித்து கவலை தெரிவித்திருந்தது.